Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த - 4 மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு :

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதம்கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை செப்.15-க்குள் நடத்த வேண்டும் என கடந்த ஜூன் மாதம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த கூடுதலாக 7 மாதம் அவகாசம் வழங்கக்கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செப்.4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு செப்.20-ம் தேதிவிசாரணைக்கு வந்தபோது ‘‘நாடாளுமன்ற தேர்தலையும், சட்டப்பேரவைத் தேர்தலையும் முழுவீச்சில் நடத்தும்போது உள்ளாட்சித் தேர்தலை உங்களால் நடத்த முடியாதா?’’ என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தவலியுறுத்தி வழக்கு தொடர்ந்த மனுதாரரான சங்கருக்கு, காலஅவகாசம் வழங்குவதில் ஆட்சேபம் உள்ளதா என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் காலஅவகாசம் வழங்குவதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘‘தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள், 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 4 மாநகராட்சி மற்றும் 3 நகராட்சிகளின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்னும் கரோனா பாதிப்பு இருப்பதாலும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழைக்காலம் என்பதாலும் தேர்தலை நடத்துவதில் சிரமம் ஏற்படும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் வரும் 2022 மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 2022 ஏப்ரல் இறுதி வரை காலஅவகாசம் வழங்க வேண்டும்’’ என கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நகர்ப்புற தேர்தலை நடத்த காலஅவகாசம் வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமைநீதிபதி, ‘‘நீங்கள்தானே தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கூறி வழக்கு தொடுத்தீர்கள், தற்போது கால அவகாசம் வழங்கலாம் எனக் கூறுகிறீர்களே?’’ என கேள்வி எழுப்பினார். மேலும், காலஅவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்றாலும் இறுதியாக வாய்ப்பு வழங்குகிறோம் என தெரிவித்த நீதிபதிகள் ‘‘எப்போது தேர்தலை நடத்தி முடிப்பீர்கள்?’’ என்றனர்.

அதற்கு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்ரோஹ்தகி, ‘‘அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் கட்டாயம் தேர்தல் நடத்தப்படும்’’ என்றார்.

ஆனால் அதையேற்க மறுத்தநீதிபதிகள், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் கூடுதல் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x