Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் - வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் : பீட்டர் அல்போன்ஸ், ஜி.கே.வாசன் கோரிக்கை

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

பீட்டர் அல்போன்ஸ்: முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், அரசு ஊழியர்களின் கடும் உழைப்பால் தமிழகத்தில் கரோனா பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், திரையரங்குகள், சுற்றுலா மையங்கள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இனிமேல் வெள்ளி, சனி,ஞாயிறுகளில் அனைத்து மதவழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தினசரி கரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழ் என்ற நிலையில் உள்ளது. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருவதால் தடுப்பூசி செலுத்துவது அதிகரித்துள்ளது. ஆனால், வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி இல்லை. இந்துக்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் விரதம் இருந்து கோயிலுக்கு செல்வதும், இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமையில் தொழுகைக்கு செல்வதும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் தேவாலயம் செல்வதும் வழக்கமானது.

எனவே, மக்களின் கோரிக்கையை ஏற்று, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x