Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

தமிழகத்தில் இருந்து முதல்முறையாக - ‘போயிங்’ நிறுவனத்துக்கு பாகங்கள் தயாரிக்க ஒப்பந்தம் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் உத்தரவு வழங்கப்பட்டது

தமிழகத்தில் முதல்முறையாக போயிங் விமான நிறுவனத்துக்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு

சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் நிறுவனம்,உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்க நீண்டகால ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தரம், துல்லியம் மற்றும் கூட்டு கலாச்சாரத்தின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் நிறுவனம் - போயிங் இடையிலான ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது சேலம், ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உள்ள வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்.

ரூ.150 கோடி முதலீடு

ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் நிறுவனம், ஓசூரில் ரூ.150 கோடி முதலீட்டில் சிவில் ஏரோஸ்பேஸ் உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய உற்பத்தி வசதியை அடுத்த 24 மாதங்களில் ஏற்படுத்த உள்ளது. மேலும்,தற்போது சேலத்தில் உள்ள உற்பத்திக் கூடத்தை50 ஆயிரம் சதுர அடி பரப்பில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் 1,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இது, தமிழக முதல்வரின் தொலைநோக்குப் பார்வையான ‘தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது’ (Made in TamilNadu) என்பதன் ஒருபடியாக அமையும்.

இதற்கான ஒப்பந்த உத்தரவை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.சுந்தரத்திடம் போயிங் இந்தியா நிறுவன விநியோக மேலாண் இயக்குநர் அஸ்வனி பார்கவா நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை சிறப்பு செயலர் அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போயிங் நிறுவன ஒப்பந்தம் குறித்து ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர்.சுந்தரம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 33 ஆண்டுகளாக இந்த தொழிலில் உள்ளோம். அமெரிக்க நிறுவனமான போயிங் நிறுவனத்தின் முகவர்களுடன் சேர்ந்து 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். தற்போது தமிழகத்தில் இருந்து நேரடியாக போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, விமான உதிரிபாகங்களை தயாரித்து வழங்க உள்ளோம். போயிங் நிறுவன சிவில்விமானங்களுக்கு 2,500 வகையான பொருட்களை அடுத்த ஆண்டுபிப்ரவரியில் இருந்து விநியோகிக்க உள்ளோம். இதற்காக ரூ.150 கோடி வரை முதலீடு செய்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x