Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM

கரோனா பெருந்தொற்று நமக்கு பல்வேறு படிப்பினைகளை கற்றுத் தந்துள்ளது - இயற்கை பொருள், மூலிகைகளை நல்வாழ்வுக்காக பயன்படுத்துங்கள் : மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

கரோனா பெருந்தொற்று நமக்கு பல்வேறு படிப்பினைகளை கற்றுத் தந்துள்ளது. எனவே, நமது பாரம்பரிய இயற்கைப் பொருட்கள், மூலிகைகளை நல்வாழ்வுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்" (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். இதன்படி 81-வது மனதின் குரல் வானொலியில் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

உலக நதிகள் தினம்

உலக நதிகள் தினத்தை இன்று கொண்டாடுகிறோம். நம் நாட்டில் நதிகளை தாயாக மதிக்கிறோம். நமது திருவிழா, பண்டிகைகளை நதியின் மடியில் கொண்டாடுகிறோம்.

இந்த நேரத்தில் அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி எழுகிறது. நதிகளை தாயாக போற்றும்போது, அவை ஏன் மாசுபட்டன? இது சிந்திக்க வேண்டிய கேள்வி. நதிகளை சிறிதளவு மாசுபடுத்துவதும்கூட மாபெரும் தவறு என்று சாஸ்திரங்களில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத், ராஜஸ்தானில் தண்ணீர் பஞ்சம் அதிகம். இதன் காரணமாக மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி ஒவ்வொரு மழைக்கால தொடக்கத்திலும் 'ஜல் ஜீலானி' விழாவை குஜராத் மக்கள் கொண்டாடுகிறார்கள். பிஹார் உள்ளிட்ட கிழக்கு பகுதிகளில் "சாத்" விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது நதிக்கரைகள், படித்துறைகள் சுத்தம் செய்யப்பட்டு செப்பனிடப்படுகின்றன. மழை நீர் சேகரிப்பு, நதிகளைத் தூய்மைப் படுத்தும் உன்னத பணியில் நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும்.

பரிசு பொருட்கள் ஏலம்

எனக்கு பரிசாக வழங்கப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை, கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு அளிக்கப்பட உள்ளது. எனவே தாராள மனதுடன் ஏலத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்.

ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் ஏழைகளுக்கு நேரடியாக உதவித் தொகை வழங்கப்படு கிறது. இதன்மூலம் லஞ்சம், ஊழல் குறைந்துள்ளது. டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தால் நாட்டின் பொருளாதார அமைப்பில் தூய்மை அதிகரித்து வருகிறது,

கதர் ஆடை விற்பனை

இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகளின் முயற்சியால் கதர் இயக்கம் உத்வேகம் பெற்றது. வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தியடி களின் பிறந்த நாளை கொண்டாட உள்ளோம். இதையொட்டி கதர் ஆடை விற்பனையில் புதிய சாதனையைப் படைக்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த பண்டிகை நாளில் உங்கள் பகுதியில் கிடைக்கும் காதிப்பொருட்கள், கைத்தறிப் பொருட்கள், கைவினைப் பொருட் களை வாங்க வேண்டுகிறேன்.

இந்திய விடுதலை வரலாற்றில் சொல்லப்படாத பல சம்பவங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் இயக்கத்தில் எழுத்தாளர்கள், இளைஞர்கள் என இதுவரை 13,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் விடுதலை போராட்டத்தில் யாரும் அறியாத கதாநாயகர்களை பற்றியும், வரலாற்றுப் பக்கங்களி லிருந்து காணாமல் போன சம்பவங் கள் பற்றியும் வரலாற்றில் பதிவு செய்யப்பட உள்ளது.

மாற்றுத் திறனாளி குழு சாதனை

சில நாட்களுக்கு முன்பு 8 மாற்றுத்திறனாளிகள் கொண்ட குழு சியாச்சின் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்திருக்கிறது இந்த குழு உடல்ரீதியிலான, புவியியல்ரீதியான சவால்களை தாண்டி, சாதனை புரிந்துள்ளது.

இந்த சாகசத்தை நிகழ்த்திய மஹேஷ் நெஹ்ரா, உத்தராகண்டை சேர்ந்த அக்ஷத் ராவத், மகாராஷ்டிரத்தை சேர்ந்த புஷ்பக் கவாண்டே, ஹரியாணாவை சேர்ந்த அஜய் குமார், லடாக்கை சேர்ந்த லோப்சாங் சோஸ்பேல், தமிழகத்தை சேர்ந்த மேஜர் துவாரகேஷ், ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இர்பான் அஹ்மத் மீர், இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சோஞ்ஜின் ஏங்க்மோவை வாழ்த்துகிறேன்.

கரோனா பெருந்தொற்று நமக்கு பல்வேறு படிப்பினைகளை கற்றுத் தந்துள்ளது. குறிப்பாக உடல்நலத்தைப் பேணுவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்திருக்கிறது. நாட்டில் பல பகுதிகளில் பாரம்பரிய இயற்கைப் பொருட்கள், மூலிகைகள் அதி களவில் கிடைக்கின்றன, இவற்றை நம்முடைய நல்வாழ்வுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளிடம் மருத்துவத் தாவரங்கள், மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம், ‘ஆயுஷ்மான்’ என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து கேலிச் சித்திரங்கள் வாயிலாக கதைகள் தயார் செய்து வருகிறது. இதன்மூலம் கற்றாழை, துளசி, நெல்லி, வேம்பு, சீந்தில், அஸ்வகந்தா, வல்லாரை போன்ற மருத்துவத் தாவரங்களின் பயன்கள் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைக்கப்படும்.

தடுப்பூசியில் சாதனை

தசரா கொண்டாட்டத்தின் போது கரோனா வைரஸ் பரவலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் பல்வேறு சாதனை களைப் படைத்து வருகிறோம், இதை உலகமே வியந்து பாராட்டுகிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். யாரும் விடுபட்டு விடக் கூடாது. யாருக்காவது தடுப்பூசி போடப்படவில்லை என்றால், அவரை அருகே இருக்கும் தடுப்பூசி மையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா முத்திரை பதிப்பது உறுதி.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். - பிடிஐ

நாக நதியை மீட்ட தமிழக பெண்கள்

மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நாடு முழுவதும் நதிகளை மீட்க, தூய்மைப்படுத்த அரசும் தன்னார்வ தொண்டு அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அந்த மாவட்டங்களின் நீர் ஆதாரமான நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டுவிட்டது.

அப்பகுதி பெண்கள் ஒன்றிணைந்து நாகநதியை மீட்கும் பணியில் இறங்கினர். அவர்கள் மக்களை ஒன்று திரட்டினர், கால்வாய்களை தோண்டினர். தடுப்பணைகளை உருவாக்கினர், மறுசெறிவு குளங்களை வெட்டினர். இதன்விளைவாக இன்று நாகநதியில் தண்ணீர் ததும்பி ஓடுகிறது.

தேசத்தந்தை காந்தியடிகள் சபர்மதி நதிக்கரையில் ஆசிரமத்தை அமைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பே சபர்மதி நதி வறண்டுவிட்டது. ஓராண்டில் 7 மாதங்கள் வரை நதியில் தண்ணீர் இருக்காது. இதன்பிறகு நர்மதையும், சபர்மதியும் இணைக்கப்பட்டன, இன்று சபர்மதியில் தண்ணீர் நிறைந்திருக்கிறது.

தமிழக பெண்களைப் போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நதிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. நம்முடைய துறவிகள் நதிகள் மீட்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாக நிதியை மீட்கும் திட்டம் கடந்த 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வாழும் கலை அமைப்பின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த நதி மீட்பு திட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டு 3,500-க்கும் மேற்பட்ட மீள் கிணறு, மறுசெறிவு குளங்களை வெட்டினர். 250 தடுப்பணைகள் கட்டப்பட்டன. 5 ஆண்டு உழைப்பின் பலனாக நாகநதி மீண்டும் உயிர் பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x