Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM

மக்கள் நம்பி வாக்களித்த - முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை

எந்த வாக்குறுதிகளை நம்பி திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்களோ, அதை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘‘நான்கு மாதங்களுக்குள் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக் கண்டத்திலேயே திமுக அரசாகத்தான் இருக்கும்’’ என்று முதல்வர் பெருமைப்பட்டுக் கொண்டாலும், தாங்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தோமோ, அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் தமிழக மக்களின் ஆதங்கம்.

எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக திமுக பல்வேறு வாக்குறுதிகள் அளித்தாலும், நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 விலை குறைப்பு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நியாயவிலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை, ஒரு கிலோ உளுத்தம்பருப்பு, 70 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல், முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்வு, கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல், மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் ஓபிசிக்கான வருமான உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்துதல், 30 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற வாக்குறுதிகள்தான் முக்கியமானவை.

இந்த வாக்குறுதிகளை நம்பியே மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். அதனால்தான் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியில் அமர்ந்தது.

அவர்கள் அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் ரூ.4 ஆயிரம் நிவாரணம், உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு ஆகிய வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.

‘திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து’ என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, தற்போது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக கூறுவது ஏற்கக்கூடியது அல்ல. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால்தான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியும்.

எனவே, எந்த வாக்குறுதிகளை நம்பி திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்களோ, அந்த வாக்குறுதிகளை, பெரும்பாலான மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வாக்குறுதிகளை, ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x