Published : 26 Sep 2021 03:24 AM
Last Updated : 26 Sep 2021 03:24 AM

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்டெல்லி கேபிடல்ஸ் வெற்றி :

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான ஷிகர் தவண் 8, பிரித்வி ஷா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷப் பந்த் 24 ரன்னில் முஸ்டாபிஸூர் ரஹ்மான் பந்தில் போல்டானார். ஸ்ரேயஸ் ஐயர் 32 பந்துகளில், 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் டிவாட்டியா ஆட்டமிழந்தார்.

ஷிம்ரன் ஹெட்மயர் 16 பந்துகளில் 28 ரன்கள் விளாசிய நிலையில் ரஹ்மான் பந்தில் வெளியேறினார். லலித் யாதவ் 14, அக்சர் படேல் 12, அஸ்வின் 6 ரன்கள் சேர்த்தனர். ராஜஸ்தான் சார்பில் முஸ்டாபிஸூர் ரஹ்மான், சேத்தன் சக்காரியா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 155 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் 17 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.

லிவிங்ஸ்டன் 1, ஜெய்ஸ்வால் 5, டேவிட் மில்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து மஹிபால் லாம்ரோர் 19 , ரியான் பராக் 2 ரன்னில் வெளியேறினர். 15 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 82 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 73 ரன்கள் தேவையாக இருந்தது. அதிரடியாக விளையாட முயன்ற ராகுல் டிவாட்டியா 9 ரன்னில் நடையை கட்டினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியால் 6 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கேப்டன் சஞ்சு சாம்சன் 53 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி சார்பில் அன்ரிச் நார்ட்ஜ் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது தொடரில் 8-வது வெற்றியை பதிவு செய்து 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் ராஜஸ்தான் 5-வது தோல்வியை பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x