Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

20 ஆயிரம் இடங்களில் இன்று மெகா கரோனா தடுப்பூசி முகாம் : தமிழகம் முழுவதும் 3-வது கட்டமாக நடப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 3-வது கட்டமாக மெகா கரோனா தடுப்பூசி முகாம், 20 ஆயிரம்இடங்களில் இன்று நடைபெறுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துக் காப்பீடு மற்றும் 108 அவரச கால ஊர்தி மேலாண்மை சேவை ஆண்டு விழாநேற்று நடைபெற்றது. இந்த விழாவில்பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், காட்சி அரங்குகளை திறந்து வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு புதிய காப்பீடு திட்ட அட்டையை வழங்கினார். காப்பீடு திட்ட விழிப்புணர்வு பதாகைகள், காப்பீடு மற்றும் 108 விழிப்புணர்வு குறுந்தகடு, கருத்துப் படத்தை வெளியிட்டார். சிறப்பாக சேவைபுரிந்த ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

2009-ம் ஆண்டு, அன்றைய தமிழகமுதல்வர் கருணாநிதியால், காப்பீட்டுத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள 1 கோடியே 58 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கினர் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாக இருந்து வருகின்றனர். 2008-ம் ஆண்டுஅப்போதைய முதல்வர் கருணாநிதியால் 108 அவசரகால ஊர்தி சேவைதொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 1,303அவசர கால ஊர்திகள் மிகச் சிறப்பான மருத்துவச் சேவை ஆற்றி வருகின்றன. புதிதாக 188 அவசரகால ஊர்திகள் வாங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் கடந்த 12-ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்ததாக 19-ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் நடந்த இரண்டாவது முகாமில் 16.41 லட்சம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

15 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகம் முழுவதும் 26-ம் தேதி(இன்று) 3-வது மெகா கரோனாதடுப்பூசி முகாம் 20 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது. இதில்,15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு தற்போது 29 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

இதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் சார்பில் 4 கோடியே 17 லட்சத்து 50,075 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளின் சார்பில் 24 லட்சத்து 47,065 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 97,140 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. விரைவில் இந்த எண்ணிக்கை 5 கோடியாக உயரும்.

தடுப்பூசி முகாம்களில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள், திங்கள்கிழமை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் ச.உமா, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் ச.குருநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x