Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

தமிழகத்தில் புதிதாக - 6 சுங்கச்சாவடிகள் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் : மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் புதிதாக 6 சுங்கச்சாவடிகள் திறக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் விழுப்புரம் - வேலூர் இடையிலான 121 கி.மீ., கடலூர் - விருத்தாசலம் - சேலம் இடையிலான 92 கி.மீ., அவினாசி - அவினாசிபாளையம் இடையிலான 33 கி.மீ., தஞ்சாவூர் - பெரம்பலூர் இடையிலான 66 கி.மீ. தொலைவு, மாநில நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் இருந்து வந்தன. மத்திய நெடுஞ்சாலைமற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் நிதியுதவியுடன் இந்த சாலைகள் 4 வழிச் சாலைகளாகவும், இரு வழிப் பாதைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் முதல் இரு சாலைகளில் தலா இரு சுங்கச்சாவடிகள், அடுத்த இரு சாலைகளில் தலாஒரு சுங்கச்சாவடி என்று மொத்தம் 6 சுங்கச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இந்த சாலைகளில் மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்ட பிறகு6 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைகளை போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்துவதும், விரிவாக்குவதும் மத்திய நெடுஞ்சாலைத் துறையின் கடமை. இது நாட்டின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு செய்ய வேண்டிய பணியாகும். தேசிய நெடுஞ்சாலையை இருவழிப் பாதையாக மாற்றிய தற்காக சுங்கக்கட்டணம் வசூலிப்பதுஎந்த வகையிலும் நியாயமல்ல. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடிகள் உள்ளன.

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 16 ஆக குறைக்கப்பட வேண்டும் என்று மாநில நெடுஞ்சாலைத் துறைஅமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவையிலேயே அறிவித்துள்ளார். அதன்பிறகும் தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடிகளை மத்திய அரசு அமைக்கவிருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, தமிழகத்தில் புதிதாக 6 சுங்கச்சாவடிகளை திறக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இப்போது உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகளை மூடி 16 ஆக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x