Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

நீலகிரி, திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் - இன்று கனமழைக்கு வாய்ப்பு :

சென்னை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று (செப். 25) கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக செப்.25-ம் தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர்,திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.

வரும் 26, 27, 28-ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக திருப்பூரில் 18 செ.மீ., சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் 11 செ.மீ., சங்ககிரி,திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தலா 9 செ.மீ., பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், திருச்சி மாவட்டம் நாவலூர் கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது விரைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும். இதன் தாக்கத்தால் 26-ம் தேதி வரை குமரிக்கடல், தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல்பகுதிகளிலும், 27, 28-ம் தேதிகளில் குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசக் கூடும். எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x