Published : 25 Sep 2021 03:32 am

Updated : 25 Sep 2021 03:32 am

 

Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

வடகிழக்கு பருவமழை காலத்தில் உயிரிழப்பு, சேதங்களை தடுக்க - அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் : ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மனித உயிரிழப்புகள் மற்றும்உடைமைகளுக்குச் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்க அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர்ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:

வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்க உள்ளது. நீர் எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அதேபோல், நீரினால் ஏற்படும் அசாதாரண சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, புயல் வெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட்டு எடுக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் அரசுத் துறைகள் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக இணைந்து மக்கள் துயர் நீக்கம் என்ற ஒரே நோக்கில் இயங்க வேண்டியது மிகவும் அவசியம்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொழிந்தாலும் கூட, அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழகத்துக்கு 448 மிமீ இயல்பாக கிடைத்தது. இது தமிழகத்தின் ஆண்டு இயல்பான மழையில் 47.32 சதவீதமாகும்.

தமிழகம், வடகிழக்குப் பருவமழையையே அதிகமாக சார்ந்துள்ளதால், மழையின் பலன்களை அதிகமாகப் பெறுவதற்கு, அதனால்ஏற்படும் இழப்பு மற்றும் சேதம் ஆகியவற்றைக் குறைப்பது அவசியமாகும். இப்பணியில் மாநில அரசின் துறைகள் மட்டுமின்றி, ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக் காவல் படை, இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட மத்திய அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்பட்ட புயல், கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிந்து, சேதத்தை குறைக்க, வருவாய்த் துறையுடன் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநில மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கபல்நோக்கு, நிவாரண மையங்கள்கண்டறியப்பட்டு தயார் நிலையில்வைக்க வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, நிவாரணப் பொருட்கள் தாமதமின்றி மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்து முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்துவெளியேற்ற வேண்டும். பாதிப்புக்குப்பின், உடனடியாக மின் விநியோகத்தை சரி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளிலும், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவு வைத்திருப்பதை இப்போதே உறுதி செய்ய வேண்டும்.

தொற்று நோய் ஏற்படாமல் இருக்கவும், நோய்த் தொற்றைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள், உபகரணங்கள், பாம்பு கடிக்கான மருந்துகள், ஆக்சிஜன் உருளைகள் போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

கனமழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சி பகுதிகளில்பருவமழை பாதிப்புகளில் இருந்துமக்களைக் காக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், உணவுக்கூடங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் நீர் இருப்பு தற்போது 79 சதவீதமாக உள்ளது. ஏற்கெனவே சென்னை பெருவெள்ளத்தை சந்தித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கனமழையால் கிடைக்கும் தண்ணீர் வீணாகாமல் குளங்கள், ஏரிகளில் சேமித்து வைக்க, செயல்திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்.

அனைத்து பகுதிகளிலும், மழை,வெள்ள நீர், தடையின்றி வெளியேற வடிகால்களை விரைந்து சீரமைப்பதுடன், சாலையில் தண்ணீர் தேங்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடிப்பில் உள்ளமீனவர்களுக்கு புயல், கனமழை, காற்றின் வேகம் குறித்த தகவல்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும். பேரிடரின்போது தேடுதல், மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அனைவரும் கரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் பேரிடர்களின்போது மனித உயிரிழப்புகள் மற்றும் உடைமைகளுக்கு சேதங்கள் ஏற்படுவதை தடுக்க நம்முடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இக்கூட்டத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி, மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச்செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x