Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

தமிழக அளவில் கோவை மாணவர் முதலிடம் - சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு : முதல் 2 இடங்களை ஐஐடி பட்டதாரிகள் பிடித்தனர்

சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. முதல் இடத்தை சுபம்குமாரும், 2-ம் இடத்தை ஜெகரதி அவாஷியும் பிடித்தனர். இருவருமே ஐஐடிபட்டதாரிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 விதமான மத்திய அரசின் உயர்பதவிகளை நேரடியாக நிரப்பும் பொருட்டு சிவில் சர்வீஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் இந்த தேர்வானது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, ஆளுமைத்தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது.

அந்த வகையில், 2020-ம்ஆண்டுக்கான மெயின் தேர்வு கடந்த ஜன.8 முதல் பிப்.17-ம்தேதி வரை நடத்தப்பட்டது. தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டு அடுத்த கட்ட தேர்வான ஆளுமைத்தேர்வுக்கு 2,046 பேர் தகுதிபெற்றனர். ஆளுமைத்தேர்வு டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் ஆக.2 முதல் செப். 22-ம் தேதி வரை நடைபெற்றது.

761 பேர் தேர்வு

இந்நிலையில், சிவில் சர்வீஸ்தேர்வின் இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று மாலை வெளியிட்டது. அதன்படி, மொத்தம் 761 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 180 பேர் ஐஏஎஸ் பணிக்கும், 36 பேர் ஐஎஃப்எஸ் பணிக்கும், 200 பேர் ஐபிஎஸ் பணிக்கும் 302 பேர் குரூப்-1 பணிகளுக்கும், 117 பேர் குரூப்-பி பணிகளுக்கும் தேர்வாகியிருக்கிறார்கள்.

சுபம்குமார் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் மும்பை ஐஐடி பிடெக் (சிவில்) பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. 2-ம் இடத்தை மாணவி ஜெகரதி அவாஷி பிடித்திருக்கிறார். அவர் போபால் ஐஐடியில் பிடெக் (எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்) படித்தவர். 3-ம் இடத்தை அங்கீதா ஜெயின் என்பவர் பிடித்துள்ளார். பெண்கள் பிரிவில் ஜெகரதி அவாஷி முதலிடம் பெற்றுள்ளார். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 545 பேர் ஆண்கள், 215 பேர் பெண்கள்.

தமிழகத்தில் 36 பேர் தேர்ச்சி

சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தில் 36 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்தியஅளவில் கோவை மாணவர் நாராயண சர்மா 33-வது இடம்பிடித்துள்ளார். தமிழக அளவில்அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

பெண்கள் பிரிவில் தென்காசிமாணவி சண்முகவள்ளி முதலிடம்பெற்றுள்ளார். மேலும், கோவையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிமாணவர் ரஞ்சித் தமிழ்வழியில்தேர்வு எழுதி வெற்றிபெற்றிருக்கிறார்.

தமிழக மாணவர்கள் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி டெல்லியில் தங்கியிருந்து படித்தும் ஆளுமைத்தேர்வில் பங்கேற்றிருக்கக் கூடும். எனவே, தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x