Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

அமெரிக்க வெள்ளை மாளிகையில் தலைவர்கள் சந்திப்பு - ஜோ பைடன் - மோடி முக்கிய ஆலோசனை : துணை அதிபர் கமலா ஹாரிஸுடனும் பேச்சு

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். கரோனா தடுப்பு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். துணை அதிபர் கமலா ஹாரிஸையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 22-ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி நேற்றிரவு சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது கரோனா தடுப்பூசி, இந்திய - பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம், தலிபான் அரசுடன் பாகிஸ்தான், சீனா நெருக்கம் காட்டுவது குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ‘‘இந்திய, அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் வாழும் 40 லட்சம்இந்தியர்கள் ஒவ்வொரு நாளும்அமெரிக்காவை வலுப்படுத்தி வருகின்றனர். துணை அதிபராக இருந்தபோது, 2020-ம் ஆண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகளாக மாறும் என்று கணித்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறியது நிரூபணமாகியுள்ளது’’ என்றார்.

பிரதமர் மோடி கூறும்போது, ‘‘கடந்த 2014, 2016-ம் ஆண்டில் ஜோ பைடனுடன் பேசியுள்ளேன். அப்போது இந்திய, அமெரிக்க உறவு குறித்த பைடனின் தொலைநோக்கு பார்வை பிரமிக்க வைத்தது. அந்த தொலைநோக்கு பார்வையை அதிபர் பைடன் இப்போது செயல்படுத்தி வருகிறார்.அடுத்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளின் வர்த்தக உறவு மேம்படும். உலகளாவிய அளவில் நம்பகத்தன்மை அவசியம் என்றுமகாத்மா காந்தி அடிக்கடி கூறுவார்.இந்த நேரத்தில் அத்தகைய நம்பகத்தன்மை தேவைப்படுகிறது’’ என்றார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியாஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் மாநாடு நடந்தது. அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா பங்கேற்றனர்.

கமலா ஹாரிஸுடன் சந்திப்பு

முன்னதாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகையில் நடந்தஇந்த சந்திப்பு ஒருமணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது கமலாஹாரிஸ் கூறியதாவது:

அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடு இந்தியா. கரோனா,பருவநிலை மாறுபாடு, இந்திய -பசிபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து மோடியுடன் ஏற்கெனவேபேசியுள்ளேன். கரோனா காலகட்டத்தில் இந்தியாவுக்கு உதவியதில் பெருமைப்படுகிறோம். இந்தியாவில் நாள்தோறும் ஒரு கோடிபேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்படுகிறது. உலக நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை அனுப்பி வருவதை வரவேற்கிறேன்.

இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடல்வழி போக்குவரத்தை உறுதி செய்வதில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுகின்றன. உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்களை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்ளும். இவ்வாறு கமலா ஹாரிஸ் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: கரோனா 2-வது அலையின்போது அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், உறவினரை போன்று இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியதை மறக்க முடியாது.அமெரிக்க அரசு, அமெரிக்க நிறுவனங்கள், இந்திய வம்சாவளியினர் என அனைத்து தரப்பினரும் இந்தியாவுக்கு தாராளமாக உதவி செய்தனர்.

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டது வரலாறு. உலகெங்கும் வாழும் மக்களுக்கு அவர் முன்மாதிரியாக, உத்வேக சக்தியாக விளங்குகிறார். அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையின்கீழ் இந்திய, அமெரிக்க நட்புறவு புதிய உச்சத்தைஎட்டும். இந்தியா வருமாறு கமலாஹாரிஸுக்கு அழைப்பு விடுக்கிறேன். அவரை வரவேற்க இந்தியமக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

சென்னையை நினைவுகூர்ந்த கமலா

பிரதமர் மோடியிடம், கமலாஹாரிஸ் தனிப்பட்ட முறையில் பேசியபோது, சிறு வயதில் தாத்தாவுடன் சேர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்ததை நினைவு கூர்ந்தார்.

கமலா ஹாரிஸின் தாத்தா பி.வி.கோபாலன், மத்திய அரசில் பணியாற்றியவர். அவர் சிறப்பாக பணியாற்றியது தொடர்பாக மத்திய போக்குவரத்து மற்றும்தொழிலாளர் நலத் துறைகள் வழங்கிய நற்சான்றிதழ் ஆவணங்களை கமலா ஹாரிஸிடம் பிரதமர் மோடி வழங்கினார். காசியின் பெருமையை பிரதிபலிக்கும் குலாபி மீனாகரி செஸ் பெட்டியையும் அன்பளிப்பாக அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x