Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தால் - தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழக அரசுக்கு மிகப்பெரிய பேரும், புகழும் ஈட்டித் தந்து கொண்டிருக்கும் ‘மக்களைத் தேடி மருத்

துவம்’ திட்டத்தால் இதுவரை 10 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனை மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்த சாத்தியக் கூறு மதிப்பீடு செய்வதற்கான ‘மக்களைத் தேடிமருத்துவம்’ மையத்தை முதல்வர்ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

காது கேட்கும் கருவிகள்

அதைத் தொடர்ந்து, உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் சென்னைஅரசு பொது மருத்துவமனை, கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.98.80 லட்சம் மதிப்புள்ள உயர்தர செவித் திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள், உயர்தர அறுவை சிகிச்சை கருவிகளை காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறைத் தலைவர்களிடம் முதல்வர் வழங்கினார். செவித் திறன்குறைந்த குழந்தைகள், முதியவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ள காதுகேட்கும் கருவியின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை கைதூக்கி விடும்அரசாகத்தான் திமுக அரசு இருக்கிறது. வானுயர வள்ளுவருக்கு சிலையும் வைப்போம். லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுக்க டைடல் பார்க்கும் அமைப்போம். அதே நேரம், ஏழைகளின் பசிக்கு உணவும் அளிப்போம்.

அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு உதாரணம்.

கடந்த 2009-ல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வராக இருந்த கருணாநிதி உருவாக்கிக்கொடுத்தார். முதல்வரின் விரிவானமருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இதுவரை 4,101 குழந்தைகளுக்கு காது நுண் எலும்புக்கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.327 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.10 கோடி ஒதுக்கீடு

ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்காக ரூ.6.36 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ய இயலாத குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை செய்யப்படுகிறது. அதற்கு ரூ.4 கோடி இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழுதடைந்த உபகரணங்களை மாற்றித் தருவதற்காகரூ.3.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 572 பேருக்கு ரூ.108 கோடி செலவில் புதிய காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை மேலும் தொடர்வதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நவீன கருவிகளை வாங்க இந்த ஆண்டுரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் பயன்பெறும் வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற மகத்தான திட்டத்தை சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்தேன். தற்போது அந்த திட்டம்தான் தமிழகஅரசுக்கு மிகப் பெரிய பேரும்புகழும் ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் கிராமம் கிராமமாக, தொகுதி தொகுதியாக, தெருத் தெருவாக சுகாதாரத்துறையினர் சென்று மக்களுக்குதேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். இதுவரைசுமார் 10 லட்சம் பேர் இத்திட்டம்மூலம் பயனடைந்துள்ளனர். அரசை தேடி மக்கள் வந்த காலம் மாறி, மக்களைத் தேடி அரசு செல்லும் காலமாக இந்த ஆட்சி உருவாக்கி இருக்கிறது.

அழுத பிள்ளைதான் பால்குடிக்கும் என்பார்கள். அழாத பிள்ளைக்கும் பால் கொடுப்பவள்தான் உண்மையான தாய். அத்தகைய தாயாக திமுக அரசு என்றைக்கும் இருக்கும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் எஸ்.உமா, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்இயக்குநர் தீபக் ஜாக்கப், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x