Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM

பெகாசஸ் உளவு விவகாரம் பற்றி விசாரணை நடத்த வல்லுநர் குழு : உச்ச நீதிமன்றம் முடிவு

புதுடெல்லி

பெகாசஸ் உளவு விவகாரத்தை விசாரிக்க வல்லுநர் குழுவை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் உலகின் 10 நாடுகளை சேர்ந்த 50,000 பேரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டிருப்பது சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. இந்தியாவில் 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், 40 செய்தியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள் என 300 பேரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தி எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா, மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார், மார்க்சிஸ்ட்எம்.பி. ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் சர்மா உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் அரசு நிர்வாகங்களுக்கு மட்டுமே பெகாசஸ் மென்பொருளை விற்பனை செய்யும். எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு நேர்மையாக விசாரணை நடத்த வாய்ப்பில்லை. இதுதொடர்பாக சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரணைநடத்தப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் 2 பக்கங்கள் கொண்டபதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவின் விவரங்கள் போதுமானதாக இல்லாததால் விரிவான மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தேசப் பாதுகாப்பு காரணமாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய விரும்பவில்லை என்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது.

இந்நிலையில் மனுதாரர் தரப்புவழக்கறிஞரான சந்தர் உதய் சிங், வேறு ஒரு வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு நேற்று ஆஜரானார். அப்போது அவரிடம் தலைமைநீதிபதி கூறும்போது, "பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை நியமித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில வல்லுநர்கள் குழுவில் இணைய விரும்பாததால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. வல்லுநர் குழு தொடர்பாக அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்று உறுதி அளித்தார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x