Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM

3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு :

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில்பங்கேற்பதற்காக, 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிகாரிகளும் இந்திய அமெரிக்கர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஏர் இந்தியா ஒன் சிறப்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலைஅமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். வாஷிங்டன் விமானப்படை தளத்தில் அவர் தரையிறங்கியபோது மழை பெய்தது. அப்போது அந்நாட்டு அதிகாரிகளும் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சாந்துவும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் கொட்டும் மழையிலும் இந்திய தேசியக் கொடி ஏந்திய நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு அளித்த இந்தியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய வம்சாவளியினரே நாட்டின் வலிமை. உலகம் முழுவதும் இந்திய மக்கள் தனித்தன்மையுடன் வாழ்கின்றனர்" என்று புகழாரம் சூட்டினார்.

முதல் நாளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வாஷிங்டனில் நடைபெற்ற கரோனா தடுப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். இதைத் தொடர்ந்து குவால்காம், அடோபி, பர்ஸ்ட் சோலார், ஜெனரல் அட்டாமிக்ஸ், பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் அவர்நேற்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

இதில் அடோபி தலைமைச் செயல் அதிகாரி சாந்தனு நாராயண், ஜெனரல் அட்டாமிக்ஸ் தலைமை நிர்வாகி விவேக் லால்ஆகியோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். உடல் நலக் குறைவுகாரணமாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், பிரதமர் மோடியை சந்திக்கவில்லை.

கமலா ஹாரிசுடன் சந்திப்பு

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். பின்னர், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய நேரப்படி நள்ளிரவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இரு தலைவர்களும் முதல்முறையாக நேரில் சந்தித்து பேசியது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் பிறகு ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகாவை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x