Published : 24 Sep 2021 03:22 AM
Last Updated : 24 Sep 2021 03:22 AM

தாம்பரம் அருகே - கல்லூரி மாணவி பட்டப்பகலில் கொலை : வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞர் தற்கொலை முயற்சி

தாம்பரம் அருகே தனியார் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த இளைஞர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை ராதா நகரைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் அரசு மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவது மகள் சுவேதா(25). இவர் ஏற்கெனவே பட்டப் படிப்பு படித்திருந்தார். கூடுதலாக தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசின் கோர்ஸ் படித்து வந்தார்.

சுவேதாவை திருக்குவளை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சுவேதாவை பார்க்க நேற்று அவர் படிக்கும் கல்லூரி அருகே வந்துள்ளார். இவரும் தாம்பரம் ரயில்வே ஊழியர் குடியிருப்புக்குச் செல்லும் சாலைப் பகுதியில் பேசி கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தினார். சுவேதா அலறியபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். சுவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் ராமச்சந்திரன் அதே கத்தியால் தானும் கழுத்தை அறுத்து கொண்டு கீழே விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி யடைந்த அப்பகுதி மக்கள் சேலையூர் போலீஸாருக்கு தகவல் தந்தனர். போலீஸார் வந்து இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுவேதா உயிரிழந்தார். ராமசந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து குரோம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பெண் உறவினர்கள் போராட்டம்

சுவேதாவின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் சடலத்தை வாங்கப்போவதில்லை என்றும் தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தினர்.

பேசுவதை தவிர்த்ததால் கொலை

சுவேதாவின் சொந்த ஊர் மயிலாடுதுறை. திருக்குவளையைச் சேர்ந்த ராமச்சந்திரன் கூடுவாஞ்சேரியில் தங்கி தனியார் கார் நிறுவனத்தில் சப்-காண்டிராக்டராக பணி செய்து வருகிறார். 2019-ல் ராமசந்திரன் சொந்த ஊர் செல்லும் ரயிலில் சுவேதாவும் சென்றுள்ளார்.

அப்போது இவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இவர்கள் தொலைபேசியில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாக சுவேதா இவரிடம் தொலைபேசியில் பேசுவதை தவிர்த்துள்ளார்.

இதையடுத்து ராமச்சந்திரன் சுவேதாவை ஒருமுறை நேரில் பேச வேண்டும் எனக்கூறி தாம்பரத்துக்கு வர வழைத்துள்ளார். ரயில் நிலையம் அருகே ரயில்வே ஊழியர் குடியிருப்புக்கு செல்லும் சாலை அருகே பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x