Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM

சாதனையாளர்களை போற்றும் சமூகத்தில் அறிஞர்கள் தோன்றுவர் : செந்தமிழ்க் கல்லூரி விழாவில் பாவேந்தர் பேரவைத் தலைவர் பேச்சு

செந்தமிழ் கல்லூரியில் இளங்குமரனார் படம் திறப்பு விழாவில் பங்கேற்ற சு.வெங்கடேசன் எம்பி, தமிழ்ச் சங்க செயலர் உள்ளிட்டோர்.

மதுரை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரியில் முது முனைவர் ரா.இளங்கு மரனாரின் உருவப் படம் திறப்பு விழா, அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது.

தமிழ்ச் சங்கச் செயலர் ச.மாரியப்ப முரளி தலைமை வகித்தார். விழாவில் திருச்சி பேராசிரியர் தமிழகன் பேசும்போது, ‘இளங்குமரனார் தனது 12-வது வயதில் திருக்குறள் முழுவதையும் கற்றார். 11-ம் வயதில் இலக்கண நூல்கள் அறிந்தவர். 16-ம் வயதில் செய்தித்தாளுக்கு கட்டுரை எழுதினார்’ என்றார்.

சு.வெங்கடேசன் எம்.பி. பேசும்போது, எனக்குதமிழ் ஆசிரியராகஇருந்தவர் இளங்கு மரனார். பாரதியைப் பற்றி நான் முழுமையாக அறிந்து கொள்ள துணை நின்றவர். மொழி சார்ந்த ஈடுபாடு நிறைந்தவர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் வழித் திருமணங்கள், குடமுழுக்குகள் நடத்தி வைத்தவர் என்றார்.

இளங்குமரனாரின் படத்தை பாவேந்தர் பேரவைத் தலைவர் செந்தலை கவுதமன் திறந்து வைத்து பேசியதாவது:

எந்த சமூகம் சாதனை யாளர்களைப் போற்றுகிறதோ அச்சமூகத்தில் அறிஞர்களும், சான்றோர்களும் தோன்றிக் கொண்டே இருப்பர். இளங் குமரனார் மறைவின்போது அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவர் மறைந்த இரண்டு மாதங் களில் அவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை தன் கைகளால் எழுதியவர் என்றார்.

முன்னதாக கல்லூரி முதல்வர் கி.வேணுகா வரவேற்றார். உதவிப் பேராசிரியர் மா.செல்வத்தரசி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் சுப்புலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x