Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் : அக். 21, 25, 28-ம் தேதிகளில் 3 கட்டங்களாக நடக்கிறது

10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21,25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகுபல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

இந்நிலையில், மாநில தேர்தல்ஆணையம் தேர்தல் தேதியைநேற்று அறிவித்தது. இதுதொடர்பாக புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 1,149 பதவிகளுக்கும் (5 நகராட்சித் தலைவர் பதவிகள், 116 நகராட்சி கவுன்சிலர் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 108 கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சில் உறுப்பினர், 108 கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் 812 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்) உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது.

முதற்கட்ட தேர்தல் காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கும் காரைக்காலில் உள்ள கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி,டிஆர்.பட்டினம், திருநள்ளாறு ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் அக்.21-ல் நடக்கிறது.

2-ம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்.25-ல், 3-ம் கட்டமாக புதுச்சேரியிலுள்ள 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்.28-ல் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது.

முதற்கட்ட தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செப்.30-ல் தொடங்கி அக்.7-ல் நிறைவடைகிறது. 2-ம் கட்ட தேர்தல் வேட்புமனுத் தாக்கல் அக்.4-ல் தொடங்கி, அக்.11-ல் நிறைவடைகிறது. 3-ம் கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்.7-ல் தொடங்கி அக்.15-ல் முடிகிறது.

மூன்றுகட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த பின், வாக்கு எண்ணிக்கை அக்.31-ல் நடக்கிறது.

இணைய வழியில் வேட்புமனு

இந்த உள்ளாட்சித் தேர்தலில்10 லட்சத்து 3 ஆயிரத்து 256வாக்காளர்கள் வாக்களிக்கஉள்ளனர். இணையதளம் மூலமாக வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x