Last Updated : 23 Sep, 2021 03:11 AM

 

Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

பண்பாட்டை பாழ்படுத்தும் மது போதை - தற்காப்புக் கொலைகளில் பெண்களுக்கு கைகொடுக்கும் ஐபிசி 100 :

மது போதையால் ஏற்படும் கலாச்சார சீரழிவின் உச்சமாக, முறையற்ற பாலியல் வக்கிரங்கள் அரங்கேறுகின்றன. அதனால் கடந்த சிலநாட்களில் தமிழகத்தில் சில கொலைகள் நடக்க, அது தற்காப்பு நிகழ்வாக கருதி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன.

மதுரையில் கடந்த 9-ம் தேதி பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கணவரை அவரது மனைவி கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்தார். இது இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 100-ன்படி, ‘‘தற்காப்புக்காக செய்யப்பட்ட கொலை என்பதால் குற்றமல்ல” என்று மதுரை மாவட்ட காவல்துறை ஆணையாளராக இருந்த அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

திருவள்ளூர் சோழவரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசிக்கும் 19 வயது இளம்பெண் கடந்த 6-ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவருக்கு சகோதரன் உறவு முறைஉள்ள ஒருவர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றார். அப்பெண் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு , சோழவரம் காவல் நிலையம் வந்து நடந்ததைக் கூறி, சரணடைந்தார். இதுகுறித்து பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் இளம்பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ளவே கொலையைச் செய்தது தெரிய வந்தது. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை இளம்பெண் தற்காப்புக்காகக் கொலை செய்தார் என்ற ஐபிசி பிரிவு 100-ன்கீழ் விடுதலை செய்து திருவள்ளூர்எஸ்.பி. அரவிந்தன் உத்தரவிட்டுஉள்ளார்.

கடந்த ஜூன் மாதம் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் பகுதியில், 40 வயதுள்ள தந்தைதன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அதிர்ச்சியடைந்த மகள், தன்னை காப்பாற்றிக் கொள்ள அம்மிக்கல்லால் தலையில் அடித்ததில் அவர் உயிரிழந்தார். அப்பெண் தற்காப்புக்காகக் கொலை செய்தார் என்ற ஐபிசி பிரிவு 100-ன் கீழ் விடுதலை செய்து திருவண்ணாமலை எஸ்.பி. அரவிந்தன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 19-ம் தேதி இரவு விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே கோவில்புரையூர் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தையை மகளே கத்தியால் குத்தி கொலை செய்தார். “அப்பெண் தற்காப்புக்காகக் கொலை செய்தார்; அதனால் ஐபிசி பிரிவு 100-ன் கீழ் விடுவிக்கப்பட உள்ளார்” என்று எஸ்பி ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய பாலியல் வன்கொடுமைகள் அனைத்தும் மதுபோதையில் நடைபெற்றது என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நம் கலாச்சாரத்தை குலைக்கும் நிலையில் மது போதை உள்ளது என்பதையே இந்த 4 நிகழ்வுகளும் தெரிவிக்கின்றன.

சமூகத்திற்கு பாடம் புகட்டும் பெண்கள்

இது குறித்து எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான ஆயிஷா நடராஜனிடம் கேட்டபோது அவர் கூறியது:

இச்சம்பவங்கள் மூலம் பெண்களும்,பெண் குழந்தைகளும் இச்சமுகத்திற்கு தகுந்த பாடத்தை சொல்லி கொடுத்துள்ளனர். மது போதை என்பது சமூக அவலத்தின் உச்சம். ‘குடிப்பதை நிறுத்தினால் மனநோயாளியாகி விடுவார்கள்’ என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குடும்ப வன்முறையில் குடிக்கும் பிரதான இடமிருக்கிறது. மது அயல்நாடுகளில் கலாச்சாரமாக இருக்கலாம்; ஆனால், நம் நாட்டில் அதற்கு அடிமையாகி கிடக்கிறார்கள். கீழ்தரமான உணர்வு நிலையில், உடனடி பாலியல் தீர்வுக்குமகளென்றும் பாராமல் இப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான முடிவை எடுக்கிறார்கள். அவர்களை மது மேலும் உணர்வுவயப்பட வைக்கிறது.கோயில்களையும், பள்ளிகளையும் மூடுவதற்கு தயங்காத அரசு, டாஸ்மாக் கடைகளை மூட தயங்குவது வேதனை.

டாஸ்மாக்கு முடிவுகட்டவேண்டிய சரியான நேரம் இதுதான் என்றார்.

....................................

பெட்டிச் செய்தி

தமிழகத்தில் மது விற்பனை

தமிழகத்தில் 7 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் இருந்தன. பல்வேறு அரசியல்கட்சிகளின் போரட்டத்திற்குப் பின் தற்போது 5,300 கடைகளாக குறைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதன் மூலம் கடந்த 2020-ம் ஆண்டு அரசுக்கு ரூ. 31,750 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x