Last Updated : 22 Sep, 2021 03:04 AM

 

Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உயிரிழந்த கனகராஜுக்கு அசைன்மென்ட் கொடுத்த முக்கியப் புள்ளி யார்?- காவல்துறை தனிப்படை தீவிர விசாரணை

கோவை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், உயிரிழந்த கனகராஜுக்கு அசைன்மென்ட் கொடுத்த முக்கியப்புள்ளி யார் என தனிப்படை போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப். 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர்(50) கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, நீலகிரி மாவட்ட காவல்துறையினர் விசாரித்தனர். சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய கார் ஓட்டுநர் கனகராஜ், சம்பவம்நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் உயிரிழந்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், கோடநாடு வழக்கு விசாரணை மீண்டும்சூடுபிடித்தது. மேற்கு மண்டலகாவல்துறை ஐஜி சுதாகர், கோவைசரக டிஐஜி முத்துசாமி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இவ்வழக்கு விசாரணையை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர், கோவைக்கு வந்த தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், கோடநாடு வழக்கு விசாரணை தொடர்பாக காவல்துறையினரிடம் விசாரித்துச் சென்றுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக, கோவை காவல்துறை உயரதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

புலனாய்வில் நிபுணத்துவம் பெற்றவர்களை தனிப்படையில் இணைத்து, கோடநாடு வழக்குவிசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்ட விதம் குறித்து, அப்போதைய நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோவை சரக டிஐஜி (தற்போதைய கோவை மாநகர காவல் ஆணையர்) ஆகியோரிடம், தற்போது நாங்கள் விசாரித்து, வழக்கு தொடர்பான தகவல்களை கேட்டறிந்துள்ளோம். தேவைப்பட்டால் அப்போதைய மேற்கு மண்டல ஐஜியிடமும் விசாரிக்கப்படும்.

கோடநாடு சம்பவத்தில், ஆரம்பகட்ட விசாரணை முறையாக நடக்கவில்லை என சந்தேகம் நிலவுகிறது. சம்பவம் நடந்த சமயத்தில் பதிவாகியிருந்த செல்போன் பேச்சுகள் குறித்த பதிவான சி.டி.ஆர் (கால்டீட்டெய்ல்ஸ் ரெக்கார்டு) விவரங்களை கூட அப்போது எடுக்கவில்லை. கோடநாடு சம்பவம் நடந்த சமயத்தில், கூடலூர் சோதனைச்சாவடியில் ஒரு கும்பல் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளனர். அதற்கு,மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அப்போது முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இருப்பினும், சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினர், சந்தேகத்துடன் பிடிபட்டவர்களிடம் விவரங்களை சேகரித்துவிட்டு அனுப்பியுள்ளனர். அதன் பின்னரே,கோடநாடு வழக்கில் தேடப்பட்டவர்கள் கூடலூர் சோதனைச்சாவடி வழியாக சென்றது தெரிந்த நிலையில், முன்னரே சேகரித்த விவரங்களை வைத்து அவர்களை பிடித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜுக்கு கோடநாடு சம்பவம் தொடர்பாக ‘அசைன்மென்ட்’ கொடுத்த முக்கியப் புள்ளி யார்என்பது குறித்தும் தீவிர விசாரணைநடந்து வருகிறது. சம்பவம் நடந்தபோது, அதில் ஈடுபட்டவர்கள் தங்களது செல்போன்களை எடுத்துச் செல்லவில்லை. சிலமுறை ஒத்திகையும் நடத்தியுள்ளனர். தேவைப்பட்டால் இவ்வழக்கின் புகார்தாரரான நேபாளத்தில் உள்ள கிருஷ்ண தாபாவிடம், அங்கு சென்று நேரிலும் விசாரணை நடத்தப்படும். இவ்வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x