Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM

தொழிற்கல்வியில் 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் - கல்விக் கட்டணங்களை அரசே ஏற்கும் : கல்லூரி சேர்க்கை ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்புக்கான சேர்க்கை ஆணையை மாணவி ஒருவருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். உடன் அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறைன்பு, உயர் கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர்.

சென்னை

தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதி மற் றும் கலந்தாய்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசு ஏற்றுக் கொள்ளும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார்.

மருத்துவக் கல்வியைப் போன்றே பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வியிலும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு உள்ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டில் இருந்தே இந்த உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புக்கான சேர்க்கையில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பிரிவில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதில் இடங்களை பெற்ற மாணவர் களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங் கும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல் கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. விழா வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங் கேற்று, 50 மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை ஆணைகளை வழங்கினார். அப்போது முதல்வர் பேசியதாவது:

அரசுப் பள்ளியில் படித்த மாணவர் கள் தொழிற்கல்வியில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கி யுள்ளது. பொறியியல் பட்டதாரியாக வேண்டும் என்ற உங்களின் கனவு நிறைவேறும் நாள் இதுவாகும். திராவிட இயக்கத்தின் நோக்கமே அனைவருக்கும் கல்வி, தகுதிக்கேற்ற வேலை தரப்பட வேண்டும் என்பதுதான். ஆட்சியைப் பிடித்த பிறகு அந்த நோக்கத்தை நிறைவேற்றும் காரியங்களையே இந்த அரசு அதிகம் செய்து வருகிறது.

தமிழகத்தின் இளைய சக்தி அனைத் தும் உயர் கல்வியை அடைந்ததாக மாற்றுவதுதான் இந்த அரசின் உயரிய இலக்கு ஆகும். நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருக்கிறீர்கள் என்றால், உங்களை இந்த பதினேழு வயது வரைக்கும் படிக்க வைக்க உங்கள் பெற்றோர் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பவர்களாக நீங்கள் உங்களை சிறப்பாக உயர்த்திக் கொள்ள வேண்டும். பள்ளியில் இருந்து கல்லூரிக் குள் நுழையும் நீங்கள், அடுத்தகட்டத் துக்கு செல்கிறீர்கள். சிறந்த வேலை வாய்ப்பை பெற வேண்டும். வேலை கொடுப்பவர்களாகவும் உயர வேண்டும்.

தொழிற்கல்வி என்பதை பட்டம் பெறும் கல்வியாக மட்டும் கருதாதீர்கள். உங்களது தொழில் அறிவை கூர்மை யாக்கவும் அதை பயன்படுத்த வேண் டும். கிராமப்புற மாணவர்களும் நகர்ப் புறங்களில் இருக்கும் மிகப்பெரிய கல்வி நிலையங்களில் சேர வேண்டும். அதற்காக ஏராளமான திட்டங்களை திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் நிறைவேற்றினோம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, மருத்துவம், பொறியியல் படிப்புகளுக் கான நுழைவுத் தேர்வை ரத்து செய் தார். இன்று நீட் தேர்வுக்கு எதிராக இந்த அரசு சட்டப் போராட்டம் நடத்தி வரு கிறது. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாண வர்களுக்கு பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம் சட்டம் போன்ற தொழிற்படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 சதவீத இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க அரசால் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

நடப்பு கல்வி ஆண்டில், இந்த சிறப்பு உள்ஒதுக்கீடு மூலம் பொறியியல் படிப்புகளில் சுமார் 10 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். அதேபோல, அரசுப் பள்ளிகளில் பயின்ற சுமார் 350 மாணவர்கள் வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் சட்டப் படிப்புகளிலும் பயன்பெறுவர்.

முன்னாள் முதல்வர் காமராசரின் காலம் பள்ளிக்கல்வி துறையின் பொற் காலம் என்றால், கருணாநிதி ஆட்சிக் காலம் கல்லூரி கல்வியின் பொற்காலமாக போற்றப்படுகிறது. இந்த ஆட்சிக்காலம், உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வியி்ன பொற்காலமாக மாற வேண்டும். நிகழ்ச்சிக்கு தயாரானபோது, தொலைக்காட்சியில், பேட்டி கொடுத்த மாணவர் ஒருவர், ‘என்னுடைய படிப்பை எப்படி முடிக்கப் போகிறேனோ’ என்ற கவலையை தெரிவித்தார். ஒரு மாணவி யும், அவரது பெற்றோரும் கவலை தெரிவித்தனர். அவர்கள் கவலைகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய அரசாக இந்த அரசு உள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரி களில் சேரும் மாணவர்களின் கல்விக் கட் டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட் டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியம், அன் பில் மகேஸ் பொய்யாமொழி, தலை மைச் செயலர் வெ.இறையன்பு, பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, உயர்கல்வித் துறை செயலர் கார்த்தி கேயன், அண்ணா பல்கலை. துணை வேந்தர் வேல்ராஜ் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x