Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் - 9 மாவட்டங்கள் தவிர பிற பகுதிகளில் அக்.2-ல் கிராமசபை கூட்டம் நடக்கும் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில், அக்டோபர் 2-ம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்த அரசாணை வெளியிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காந்தி ஜெயந்தி தினமான அக்.2-ம் தேதி கிராமசபை கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கக் கோரிய விண்ணப்பத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் நிராகரித்ததை எதிர்த்து விருத்தாசலம் ஒன்றியம் ராஜேந்திரபட்டினம் கிராம ஊராட்சித் தலைவர் சுரேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகி, ‘‘ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் வரும் அக்.2-ம் தேதி கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, கிராமசபை கூட்டங்களை நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசைலா, ‘‘கிராமசபை கூட்டத்தைக் கூட்ட ஊராட்சி மன்ற தலை வருக்கு மட்டும் அதிகாரம் உள்ள நிலை யில் மாவட்ட ஆட்சித் தலைவர் விருப் பத்தின்படியே கிராமசபை கூட்டம் நடப்பது போன்ற சூழலை உருவாக்கி இருப்பது சட்டவிரோதமானது’’ என்றார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்.6-க்கு தள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில், கிராமசபை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக, ஊரகவளர்ச்சித் துறை செயலர் கே.கோபால், ஊரக வளர்ச்சி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்கள் மற்றும் இதர 28 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் கரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகள்

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:

கிராமசபை கூட்டங்கள் திறந்த வெளியில் நடத்தப்பட வேண்டும். ஊராட்சியின் மக்கள் தொகைக்கேற்ப, அதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். கூட்டம் நடத்தப்படும் முன்பு, அந்த பகுதி முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். திறந்தவெளியில் ஷாமியானா பந்தல் போடப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளும் போதிய அளவுக்கு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கூட்டத்தில் பங்கேற்பவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். உடல் வெப்பநிலை அதிகம் உள்ளவரை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை களை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது.

சமூக இடைவெளி பின்பற்றப் படுவதுடன் குறைந்தபட்சம் ஒவ்வொரு வருக்கும் இடையில் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். கரோனா அறிகுறியான இருமல், காய்ச்சல் போன்றவை இருந்தால் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டாம். கரோனா தொற்று பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் அனுமதிக்க வேண்டாம்.

கூட்டம் காலை 10 முதல் 1 மணிக்குள் நடத்தப்பட்டு, அந்த நேரத்துக்குள்ளேயே அனைத்து நிகழ்வுகளும் ஆலோசிக்கப்பட வேண்டும். ஊராட்சியின் ஒருபகுதி நோய்க் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக் கப்பட்டிருந்தால், அங்கு வேறு நாளில் கூட்டம் நடத்தலாம். இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக பஞ்சாயத்து ஆய்வாள ரிடம் இருந்து அனுமதி கடிதம் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x