Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

பராமரிக்கப்படாத மாநகராட்சி மழைநீர் கால்வாய்கள் : மழைக்காலங்களில் வெள்ளக்காடாகும் மதுரையின் சாலைகள்

மழைநீர் கால்வாய்களை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் அலட்சியம் காட்டுவதால் மழைக்காலங்களில் மதுரை சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியவில்லை. மழையோடு மழையாக சாலைகளும் பாழாகி விடுகின்றன.

மதுரை மாநகராட்சியில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட மற்றும் மாநகராட்சி சாலைகள் உள்ளன. இதில் மாநகராட்சி மட்டும் 1,572 கி.மீ. தொலைவுக்கு முக்கிய சாலைகள், குடியிருப்பு சாலைகளை பராமரிக்கிறது. இந்த சாலைகள், தார் சாலையாகவும், சிமெண்ட் சாலைகளாகவும் உள்ளன. சில இடங்களில் கருங்கற்கள், பேவர்பிளாக் சாலைகளாகவும் உள்ளன. இந்த சாலைகளின் ஓரங்களில் மழைநீர் கால்வாய்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான குடியிருப்பு சாலைகளில் மழைநீர் கால்வாய்கள் இல்லை.

முக்கிய சாலைகள் செல்லும் பகுதிகளில் மட்டும் மொத்தம் 13 பெரிய மழைநீர் கால்வாய்கள் உள்ளன. இந்த மழைநீர் கால்வாய், பருவமழைக்கு முன் பெயரளவுக்கு மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. மற்ற காலங்களில் இக்கால்வாய்களை பராமரிக்காமல் மாநகராட்சி விட்டுவிடுகிறது. அதனால், இந்த மழைநீர் கால்வாய்களில் நிரந்தரமாக முட்புதர்கள் அடர்ந்தும், குப்பைகள் நிரம்பியும் காணப்படுகின்றன. மண் நிரம்பி மேடாகியும் விடுகிறது. தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்களில் வீணாகும் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகின்றன. அதனால், மழைக்காலங்களில் மழைநீர் இக்கால்வாய்களில் செல்லாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் ஏற்கெனவே தரமில்லாமல் போடப்பட்ட மாநகராட்சி சாலைகள், மழையோடு மழையாக அரிக்கப்பட்டு படுமோசமாகி விடுகின்றன. மீண்டும் சாலைகளை புதிதாக போட நிதியில்லாவிட்டால் பேட்ஜ் ஒர்க் மட்டும் பார்க்கப்படுகிறது. அதனால், நிரந்தரமாக மதுரையில் மாநகராட்சி சாலைகள் குண்டும் குழியுமாகவும், கற்கள் பெயர்ந்து உருக்குலைந்தும் போக்குவரத்துக்கு லாயக்கற்றும் உள்ளன. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கியும், கோடை காலத்தில் புழுதி வாரி இறைப்பதுமாக இருப்பதால் வாகன ஓட்டிநர்கள் அவதிப்படுகிறார்கள்.

நகரின் பெரும்பாலான சாலைகளில் மழை நின்று சாலைகளில் எப்போது மழைநீர் வடிகிறதோ அப்போதுதான் செல்ல முடிகிறது. குறிப்பாக பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், அண்ணாநகர் காவல் நிலையம் முன்புள்ள சாலைகளில் மழை நின்ற பிறகும், மழைநீர் வடிவதற்கு பல மணி நேரம் ஆவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் ஆழம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்க நேரிடுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தற்போது மழைநீர் கால்வாய்களை பராமரிக்கும் பணி நடக்கிறது, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x