Published : 20 Sep 2021 03:18 AM
Last Updated : 20 Sep 2021 03:18 AM

விண்வெளி சுற்றுலா சென்ற 4 பேர் பூமிக்கு திரும்பினர் :

வாஷிங்டன்

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேர் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். உலகம் முழுவதும் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை தொடங்கினார். அதன்படி, கடந்த வியாழக்கிழமையன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளிக்கு 4 அமெரிக்கர்களுடன் ‘பால்கான் 9’ராக்கெட் விண்ணில் பறந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஜார்ட் ஐசக்மேன், செயின்ட் ஜூட் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றும் 29 வயது பெண் ஹேலே ஆர்சனாக்ஸ் உள்ளிட்ட 4 பேர் இந்த விண்வெளிப் பயணம் மேற்கொண்டனர். ராக்கெட் விண்ணில் சென்ற சில நிமிடங்களில் அதன் 2வது அடுக்கு தனியாகப் பிரிந்து ‘கேப்சூல்’ என்று அழைக்கப்படும் விண்கலம் வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப் பாதைக்குள் சென்றது. பூமியில் இருந்து 575 கி.மீ. உயரத்தில் 3 நாட்களாக இந்த விண்கலம் பூமியைச் சுற்றிவந்தது. மணிக்கு 27,300 கி.மீ. வேகத்தில் 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை விண்கலம் சுற்றி வந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா கடற்கரை பகுதியில் விண்கலம் சனிக்கிழமை மாலை தரையிறங்கியது. விண்வெளிக்கு சுற்றுப் பயணம் சென்ற 4 பேரும் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். அவர்கள் தரையிறங்கும் காட்சி யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. பூமிக்கு திரும்பிய சுற்றுலா பயணிகளுக்கு உலகம் முழுவதும் பலரும் வாழ்த்துக்களும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். தங்கள் பயணம் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அதற்கு காரணமானவர்களுக்கும் தங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தவர்களுக்கு நன்றி என்றும் விண்வெளிப் பயணம் மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x