Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக - சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்பு : நீண்ட குழப்பத்துக்கு பிறகு காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இருந்தஅமரீந்தர் சிங்குக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் ஏற்பட்டது. முதல்வர் அமரீந்தர் சிங் அரசை சித்து வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினார். இன்னும் சில மாதங்களில் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், உட்கட்சிப் பூசலுக்கு முடிவு கட்ட நினைத்த காங்கிரஸ் மேலிடம், இருவரையும் அழைத்து பேச்சு நடத்தியது. அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை கட்சி மேலிடம் கடந்த ஜூலையில் நியமித்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் அமரீந்தர் சிங்கே முதல்வர் வேட்பாளராக தொடர்வார் என்று அவரையும் சமரசம் செய்தது.

எனினும், பஞ்சாப் காங்கிரஸில் உட்கட்சி பூசல் தொடர்ந்தது. அமரீந்தர் சிங்குக்கு எதிராக அமைச்சர்கள் சிலரும் எம்எல்ஏக்கள் சிலரும் போர்க்கொடி தூக்கினர். சிரோமணி அகாலிதள கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதலுடன் அமரீந்தர் சிங் ரகசிய உறவு வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கட்சிக்குள் மோதல் அதிகரித்ததை தொடர்ந்து, பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சனிக்கிழமை நடப்பதாக அறிவிக்கப்பட்டது. கூட்டம் நடப்பதற்கு முன்னதாக முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார்.

பல மணி நேரம் ஆலோசனை

இதையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க சண்டிகரில் நேற்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. கட்சியின் மாநில பொறுப்பாளர் ஹரீஷ் ராவத், மேலிட பார்வையாளர்கள் அஜய் மாக்கன், ஹரீஷ் சவுத்ரி ஆகியோர் புதிய முதல்வர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர், நவ்ஜோத் சிங் சித்து, மூத்த தலைவர் அம்பிகா சோனி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. எனினும், எந்த முடிவும் எடுக்கப்படாததால் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாநில அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவின் பெயர் காங்கிரஸ் மேலிடத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் முதல்வராக அறிவிக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியாயின.

இதனால், பல மணி நேரம் குழப்பம் நீடித்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதை கட்சியின் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் அறிவித்தார். ‘பஞ்சாப் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்தார்.

முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சரண்ஜித் சிங் சன்னி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் நவ்ஜோத் சிங் சித்துவும் சென்றார். பின்னர் ஆட்சியமைக்க வருமாறு சரண்ஜித் சிங் சன்னிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, பஞ்சாபின் புதியமுதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள 59 வயதான சரண்ஜித் சிங் சன்னி, அமரீந்தர் சிங் அரசில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக இருந்தார்.தலித் தலைவரான இவர் பஞ்சாபின் கரார் நகராட்சி தலைவராக இருமுறைபதவி வகித்துள்ளார்.

2007-ம் ஆண்டு முதல்முறையாக சம்கார் சாஹிப் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012, 2017சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதே தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். 2015-ல் பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக அறிவிக்கப்பட்டதையடுத்து, சண்டிகரில் உள்ள அவரது வீடு முன்பு ஆதரவாளர்கள் திரண்டு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்.

அமரீந்தர் வாழ்த்து

பஞ்சாபின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள சரண்ஜித் சிங்சன்னிக்கு பதவி விலகிய முதல்வர்அமரீந்தர் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘சரண்ஜித் சிங் சன்னிக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். எல்லைக்கு அப்பாலிருந்து அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், எல்லை மாநிலமான பஞ்சாபையும் நமது மக்களையும் சரண்ஜித் சிங் சன்னி பாதுகாப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் சரண்ஜித் சிங் சன்னிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x