Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் :

சென்னை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ‘பெட்ரோல், டீசல்விலை குறைக்கப்பட வேண்டுமானால், அவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் அல்லது அதற்கான ஆயத்தீர்வை குறைக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார். அதாவது, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்றுதான் தேர்தலுக்கு முந்தைய திமுகவின் நிலைப்பாடாக இருந்தது.

இந்நிலையில், லக்னோவில் கடந்த 18-ம் தேதி நடந்த ஜிஎஸ்டிக்கான 45-வது கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதுகுறித்த தீர்மானம் பரிசீலிக்கப்பட்டது.

ஆனால், இதை பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்ததால் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், தமிழக நிதிஅமைச்சர் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் மத்திய நிதி அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி விதிப்பை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை’ என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டுவரக் கூடாது என்பது, தேர்தலுக்கு பிந்தைய திமுகவின் நிலைப்பாடாக உள்ளது.

எனவே, மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து, திமுகவின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை முதல்வர் ஸ்டாலின் நிலைநிறுத்த வேண்டும். இதன்மூலம், பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.3 குறைப்பு என்ற திமுகவின் வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x