Published : 19 Sep 2021 03:12 AM
Last Updated : 19 Sep 2021 03:12 AM

நாட்டிலேயே முதல்முறையாக சொகுசு கப்பல் சுற்றுலா: ஐஆர்சிடிசி அறிமுகம்

புதுடெல்லி

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) நிறுவனம் தற்போது சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கான வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் நீர்வழி தடங்களில் சொகுசுக் கப்பலில் சுற்றுலாசெல்வதற்கு இனி ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்காக இந்நிறுவனம் கார்டெலியா குரூயிஸஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்துள்ளது. பயணிகள் கப்பல்போக்குவரத்தில் கார்டெலியா குரூயிஸஸ் நிறுவனம் பிரபலமானது. இந்தியாவில் இத்தகைய சொகுசு கப்பலில் பயணிப்பதற்கு முதல் முறையாக ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.

கரோனா கால கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட பிறகு வழக்கமான முறையில் முன்பதிவுகளைமேற் கொள்ளலாம். உள்நாட்டுமற்றும் சர்வதேச வழித்தடங்களில் இத்தகைய முன்பதிவுகளை மேற்கொள்ள இது வழிஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பகுதிகளில் சொகுசுகப்பல் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தப் பயணிகள் கப்பலில் கோவா,டையூ, கொச்சி, லட்சத் தீவுகள், இலங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை - கோவா, மும்பை - டையூ, மும்பை கடல் பகுதி ஆகியவை 2 இரவுகளைக் கொண்ட பயணமாகும். கொச்சி- லட்சத் தீவுகள் பயணமானது 3 இரவுகளைக் கொண்டது. மும்பை, லட்சத் தீவுகள் கடல் பகுதியில் மட்டும் நான்கு இரவுகளைக் கழிப்பதற்கான பயணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடல் பகுதி பயணத்தில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுக்கு கார்டெலியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.கப்பலிலேயே நீச்சல் குளம், மதுபான பிரிவு, திரையரங்கம், குழந்தைகள் விளையாடும் பகுதி, உடற்பயிற்சி கூடம் ஆகிய வசதிகளை பயணிகள் அனுபவிக்கலாம்.

முதல் கட்டமாக கோவா, டையூ, லட்சத் தீவுகள், கொச்சி மற்றும் இலங்கை வரையிலான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மும்பையிலிருந்து பயணத்தைத் தொடரலாம்.

அடுத்த ஆண்டு மே மாதம் சென்னையிலிருந்து கப்பல் பயணபோக்குவரத்து தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x