Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் ராஜினாமா :

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பஞ்சாபின் பாட்டியாலா மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் அம்ரிந்தர் சிங். கடந்த 1963 முதல் 1966 வரை இந்திய ராணுவத்தில் அதிகாரியாக அவர் பணியாற்றினார். 1984-ல் சிரோமணி அகாலிதளத்தில் இணைந்தார். கடந்த 1992-ல் அகாலிதளத்தில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார். கடந்த 1998-ம் ஆண்டில் தனது கட்சியை காங்கிரஸோடு இணைத்தார்.

கடந்த 2002 முதல் 2007 வரை பஞ்சாப் முதல்வராக பதவி வகித்தார். இதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 இடங்களை கைப்பற்றியது. கடந்த 2017 மார்ச் 16-ம் தேதி அம்ரிந்தர் சிங் மீண்டும் முதல்வரானார்.

முன்னதாக கடந்த 2017 ஜனவரியில் பாஜகவில் இருந்து விலகிய நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸில் இணைந்தார். அப்போது முதல் அம்ரிந்தர் சிங்குக்கு எதிராக சித்து காய் நகர்த்தினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்து தலைமையில் 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மேலிட தலைவர்களின் பலகட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த பின்னணியில் முதல்வர் அம்ரிந்தர் சிங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சண்டிகரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

என் மீது கட்சி தலைமைக்கு நம்பிக்கை இல்லை. தொடர்ச்சியாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அரசியல் விவகாரங்களை கையாண்டவிதம் என்னை அவமதிக்கும் வகையில் இருந்தது. எனவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். எனது முடிவை சோனியா காந்தியிடம் தெரிவித்துவிட்டேன்.

எனது பதவி காலத்தில் பஞ்சாப் மக்களுக்காக உழைத்தேன்.

பாகிஸ்தானின் சதியால் காஷ்மீரில் இந்திய வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்த நாட்டு ராணுவ தளபதி பஜ்வாவுடன் சித்து உறவாடி வருகிறார். தனது துறையைக்கூட சித்துவால் திறம்பட நிர்வகிக்க முடியவில்லை. அவரால் எப்படி மாநிலத்தை நிர்வகிக்க முடியும். அவரால் பஞ்சாபுக்கு மோசமான விளைவுகள் ஏற்படலாம்.

அடுத்து யார் முதல்வர் ஆவார் என்பது பற்றி கவலையில்லை. அரசியலை பொறுத்தவரை எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. எதுவும் நடக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் சுனில் ஜாக்கர் பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பதவி விலகிய அம்ரிந்தர் சிங் பாஜகவில் இணையக்கூடும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x