Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM

கடந்த ஆண்டு இந்தியாவில் 398 தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேற்றம் :

புதுடெல்லி

நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் சார்பில் 398 தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சார்பில் ஆண்டுதோறும் நாட்டில் நடந்த குற்றச் சம்பவங்களை பட்டியலிட்டு அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கடந்த ஆண்டு அரங்கேற்றப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் மட்டும் 398 தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் அதிகபட்சமாக 240 தாக்குதல்களை இடதுசாரி தீவிரவாத அமைப்புகள் நடத்தியிருக்கின்றன. இதுதொடர்பாக 441 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 61 பேர், பாதுகாப்புப் படையினர் 37 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதல்களில் 55 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜிகாதி தீவிரவாத அமைப்புகள் சார்பில் 76 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் பெரும்பாலானவை, ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும். இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 11 பேர், பாதுகாப்புப் படையினர் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, 387 குற்றச் சம்பவங்களிலும் ஜிகாத் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 82 ஜிகாத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேபோல, வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் சார்பில் 45 தாக்குதல்களும், இதர தீவிரவாத அமைப்புகள் சார்பில் சார்பில் 47 தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் 20 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

அனைத்து தாக்குதல்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் 80 பேரும், பாதுகாப்புப் படையினர் 71 பேரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x