Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM

பிஹார் மாநிலத்தில் பள்ளியில் படிக்கும் - 2 சிறுவர்கள் வங்கிக் கணக்கில் ரூ.960 கோடி வரவு : விசாரணை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

பிஹாரில் உள்ள கதிஹார் மாவட்டதைச் சேர்ந்த இரு பள்ளிச் சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.960 கோடி வரவாகியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கதிஹார் மாவட்டம் பாஸ்தியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குருச்சந்திர விஸ்வாஸ் மற்றும் ஆசித் குமார். இவர்கள் இருவரும் ஆறாம் வகுப்புப் படித்து வருகின்றனர். இவ்விருவருக்கும் ‘உத்தர் பிஹார் கிராமின்’ வங்கியில் கணக்கு இருக்கிறது. பள்ளிக்கான சீருடை வாங்கவும், பள்ளிக் கட்டணம் தொடர்பான செலவினங்களுக்காகவும் அரசு திட்டத்தின் கீழ் உதவித் தொகை இந்த வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும். தங்கள் வங்கிக் கணக்கில் உதவித் தொகை ஏறிவிட்டதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள தங்கள் பெற்றோருடன் ஏடிஎம் சென்றுள்ளனர். அங்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை தகவல்களை சோதித்த போது, அதில் கோடிக் கணக்கில் வரவாகியிருப்பது தெரியவந்தது. ஆசித் குமார் கணக்கில் ரூ.900 கோடியும், குருச்சரண் விஸ்வாஸ் கணக்கில் ரூ.60 கோடியும் வரவாகியிருந்தது.

இதைக் கேள்விப்பட்ட அக்கிராம மக்கள், தங்கள் கணக்கில் கோடிக் கணக்கில் பணம் ஏறியிருக்கக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்புடன் தங்கள் வங்கி ஏடிஎம் அட்டையை எடுத்துக்கொண்டு வங்கிக்கு விரைந்தனர்.

இதுதொடர்பாக கதிஹார் மாவட்ட ஆட்சியர் உதயன் மிஸ்ரா கூறுகையில், 'எப்படி அந்த இரு மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் இவ்வளவு பெரியதொகை வரவானது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இது வங்கியின் கணினிச் செயல்பாட்டு முறையில் ஏற்பட்ட பிழை என்றும், அம்மாணவர்களின் கணக்கில் அவ்வளவு தொகை வரவாகியிருப்பதுபோல் காட்டுகிறதே தவிர, உண்மையில் அவர்களுடைய கணக்கில் அந்தத் தொகை இல்லை என்றும் அந்தவங்கியின் மேலாளர் கூறியுள்ளார். இது தொடர்பான ஆவணங்களைச் சமர்பிக்க அந்த வங்கியைக் கேட்டுள்ளோம்' என்று தெரிவித்தார்.

இவ்வாறு தனிநபர் வங்கிக் கணக்கில் மிகப் பெரிய தொகை வரவாகியிருப்பது பிஹாரில் இரண்டாவது முறை நடக்கிறது.

சமீபத்தில், பிஹாரில் ககாரியா மாவட்டத்தில் உள்ள பக்தியாபூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் வரவானது. அந்த தொகை தவறுதலாக அவருடைய வங்கிக் கணக்குக்கு சென்றுவிட்டது என்று அதை திருப்பி ஒப்படைக்குமாறு வங்கி அதிகாரிகள் அவரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர், “பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறினார். முதல் தவணையாக ரூ.5 லட்சம் தந்துள்ளார். அந்தத் தொகைதான் இது’ என்று கூறி, பணத்தை திருப்பி செலுத்த மறுத்துள்ளார். அவர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x