Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM

அமைச்சர்களுடன் இணைந்து செயல்படுங்கள் - அரசு அறிவிப்புகளை கால வரம்புக்குள் நிறைவேற்றுங்கள் : நேரடியாக கண்காணிப்பேன் என துறை செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசின் அறிவிப்புகளுக்கு காலவரம்பு நிர்ணயித்து, அதற்குள்நிறைவேற்றுங்கள். அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று அனைத்து துறைகளின் செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை செயலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம்சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடந்தது. அனைத்து துறைகளின் செயலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு தொடக்க உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து, துறைகள் வாரியாக அறிவிப்புகளை ஆய்வு செய்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளோம். ஆளுநர் உரை, பட்ஜெட், வேளாண் பட்ஜெட், துறைவாரியாக புதிய அறிவிப்புகள், 110 விதி என்றும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். இவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய கடமை, பொறுப்பு உள்ளது.

ஓர் அறிவிப்புக்கு பல துறைகளின் ஒத்துழைப்பு, அனுமதி தேவைப்படும். இதுகுறித்து துறை செயலர்கள் ஒன்றாக அமர்ந்து, துறை ரீதியான கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் தொடர்புடைய துறைகளுடன் துணை கமிட்டி நியமிக்கலாம். அறிவிப்புகளை செயல்படுத்தும்போது, வழக்குகள், நீதிமன்ற தடை போன்றவை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, 6 மாதங்களில் அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். எனவே இந்த 6 மாதத்துக்குள் அறிவிப்புகளை செயல்படுத்த வேண்டும். எனவே, வேகமாக, விவேகமாக பணியாற்ற வேண்டும்.

அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து அமைச்சர்களை கண்காணிப்பேன் என்று கூறியுள்ளேன். அமைச்சர்களை மட்டுமல்ல, துறைசெயலர்களும் இந்த அறிவிப்புகளை குறித்த காலத்துக்குள் முடிக்கும் வகையில் என் கண்காணிப்பு இருக்கும்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆன்லைன் தகவல் பலகையை ஏற்படுத்தி, அதன்மூலம் அனைத்து துறைகளின் திட்டங்கள் குறித்த தகவல்களை நான் தினமும் பார்க்கப்போகிறேன். என்அறையிலேயே பார்க்கும் வகையில் ஏற்பாடு நடந்து வருகிறது. வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் அதில் இடம்பெறும். இதற்கு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். வாரம் ஒருமுறை இதை ஆய்வு செய்வேன்.

அரசாணை போட்டுவிட்டால், அறிவிப்பு நடைமுறைக்கு வந்ததாக அர்த்தம் இல்லை. அதன் பலன் மக்களை சென்றடைய வேண்டும். ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்த கால நிர்ணயம் செய்துகொண்டு, அந்த காலத்துக்குள் நிறைவேற்றுங்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் இணைந்ததுதான் அரசு. எனவே, இணைந்து செயல்படுங்கள். வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தாருங்கள். அனைத்து துறைகளும் ஒருசேர முன்னேற்றம் கண்டது என்ற சூழலை உருவாக்க வேண்டும்.

அரசுத் துறைகள் தனித்தனியாக இயங்காமல் ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.உங்கள் துறையின் செயலாக்கத்தை அறிந்துகொள்ள அக்டோபரில் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளேன். அதற்குள் தேவையான அரசாணைகளை வெளியிட்டு பணிகளை தொடங்க முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x