Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

தூய காற்று செயல்திட்டத்தை நிறைவேற்ற : முதல்வருக்கு அன்புமணி கடிதம் :

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மாநில தூய காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்காக அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஜூலை 29-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

எனவே, ஒரு முழுமையான, அறிவியல்பூர்வமான மாநில தூய காற்று செயல்திட்டத்தை, அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் உடனடியாக உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

இந்திய அரசின் தேசிய தூய காற்று திட்டம் 2019-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின்படி மாநில தூய காற்று செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டு நெறிகளை, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் 2019-ம் ஆண்டிலேயே உருவாக்கியிருக்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இச்செயல்திட்டத்தை2020-ம் ஆண்டில் உருவாக்கி, செயல்படுத்தியிருக்கவேண்டும்.

இது 1981 இந்திய காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின்படி அரசுகளின் சட்டபூர்வமான கடமை ஆகும். ஆனால் 2021-ம் ஆண்டு முடிவடையும் நிலையிலும்கூட அதற்கான முதற்கட்டப்பணிகள் கூட தொடங்கப்படவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தூய காற்று செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. அனைத்து தரப்பினருடனும் முழு அளவிலான கருத்துக் கேட்பை நடத்தி தூய காற்று செயல்திட்டம் உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x