Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM

உருமாறிய கரோனா வைரஸை கண்டறிய ரூ.4 கோடியில் - சென்னையில் மரபணு பகுப்பாய்வுக் கூடம் திறப்பு : முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார்

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை ஆய்வகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மரபணுபகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் திறன்மிகு உதவியாளர் நிலை-2பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 9 பேருக்கும், இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு கருணை அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டுள்ள 82 வாரிசுதாரர்களுக்கும் பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இந்த விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு பணி அலுவலர் பி.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழுமத்தின் திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது, துறை இயக்குநர்கள் எஸ்.கணேசன் (இந்திய மருத்துவம், ஓமியோபதி), செல்வவிநாயகம் (பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து), எஸ்.குருநாதன் (மருத்துவம், ஊரக நலப் பணிகள்), ஆர்.நாராயணபாபு (மருத்துவக் கல்வி), எஸ்.நடராஜன் (மாநில சுகாதாரபோக்குவரத்து) ஆகியோர் பங்கேற்றனர்.

சட்டப்பேரவையில் கடந்த 2-ம் தேதி சுகாதாரத் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, சென்னை டிஎம்எஸ் வளாக பொதுசுகாதார ஆய்வகத்தில் ரூ.4 கோடி செலவில் மரபணு பகுப்பாய்வுக் கூடம் நிறுவப்படும் என்ற அறிவிப்பை துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அறிவித்த 2 வாரத்துக்குள் இந்த பகுப்பாய்வுக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய் தொற்றை உருவாக்கும் வைரஸ், அதன் மரபணுவில் உண்டாகும் தொடர் மாற்றங்களால் புதுவகையாக உருமாறி, நோய் தொற்றின் தாக்கத்தை தீவிரப்படுத்துகிறது. உருமாறிய கரோனாவைரஸ்களை கண்டறிய மரபணுபகுப்பாய்வகம் அவசியம்.

தமிழகத்தில் கரோனா வைரஸ்களின் உருமாற்றத்தை கண்டறிய,மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ்கர்நாடகா, தெலங்கானாவில் செயல்படும் மரபணு பகுப்பாய்வுக் கூடங்களுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. அதனால் முடிவுகளைப் பெறுவதில்தாமதம் இருந்தது.

தற்போது, இக்குறையைப் போக்கும் வகையில், சென்னையிலேயே மரபணு பகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, உருமாறிய கரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதன் அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, கரோனாநோய் தாக்கத்தை பெருமளவு தடுக்க முடியும்.

மாநில அரசால் மரபணு பகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்பட்டிருப்பது நாட்டிலேயே இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x