Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM

‘அண்ணாத்த’ போஸ்டருக்கு ஆட்டு ரத்தத்தால் அபிஷேகம் - ரஜினி ரசிகர்களுக்கு மன்ற நிர்வாகி கண்டனம் :

ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்ததற்கு ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதை ரஜினிரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதற்கிடையில், சில ரசிகர்கள் ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேனராக உருவாக்கி வைத்து, அதன் முன்பு ஆடு ஒன்றை வெட்டி, அதன் ரத்தத்தை பேனர் மீது தெளித்துக் கொண்டாடியுள்ளனர். இந்த சம்பவம் எந்த ஊரில் நடைபெற்றது என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியானது. இதை பார்த்த அனைவருமே ரஜினிரசிகர்களை கடுமையாக சாடினர்.

இந்நிலையில், இதை அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கண்டித்துள்ளது. இதுதொடர்பாக மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒரு சிலர் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது; மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற அருவருப்பான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x