Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM

'நீட்' தேர்வுக்கு தயாரான மாணவர் தற்கொலை : அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி

மேட்டூர் அருகே நீட் தேர்வு எழுதஇருந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் கருமலைக்கூடல் அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்- சிவஜோதி தம்பதியின் 2-வது மகன் தனுஷ் (19). இவர், 3-வது முறையாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகி வந்தார். அவர் மேச்சேரி அருகேயுஉள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி தேர்வு மையத்தில் நேற்று தேர்வு எழுத இருந்தார்.

இந்நிலையில், தனுஷ் அவரது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது நேற்று அதிகாலை தெரியவந்தது. தகவல் அறிந்து கருமலைக்கூடல் போலீஸார் தனுஷின் சடலத்தை கைப்பற்றி மேட்டூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பினர்.

உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் அவரது உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தனுஷின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், எம்எல்ஏக்கள் மணி, சதாசிவம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், சேலம் எம்பி பார்த்திபன், ஆட்சியர் கார்மேகம், திமுக இளைஞரணி செயலாளர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி

தனுஷின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய கூட்டு முயற்சி அவசியம். கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் 13-ம் தேதி (இன்று) கூடுதல் அழுத்தத்தோடு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம்.

நீட் தேர்வு குறித்து சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும். பெற்றோர்கள், மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x