Published : 12 Sep 2021 03:19 AM
Last Updated : 12 Sep 2021 03:19 AM

அரசின் எந்த திட்டமும் வெறும் அறிவிப்புடன் நிற்காது - திட்டங்கள், அமைச்சர்கள், அதிகாரிகளை நேரடியாக கண்காணிப்பேன் : அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் உறுதி

வெறும் அறிவிப்புடன் எந்த திட்டமும் நின்றுவிடாது. திட்டங்களையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நேரடியாக கண்காணிப்பேன் என்று அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டதொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று காலத்தில் கோயில்அர்ச்சகர்கள் சந்தித்த பொருளாதாரநெருக்கடிகளை கருத்தில்கொண்டு, அதில் இருந்து அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மீட்டெடுக்கும் வகையில், துறையின் நிர்வாககட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நிலையான மாத வருமானமின்றி பணியாற்றி வந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு அரிசி, மளிகைப்பொருட்களுடன் ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது. இதன்மூலம்சுமார் 11,065 கோயில்களில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

மேலும், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 6 இடங்களில் ரூ.21.40 கோடியில் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், செப்.4-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை மானியக்கோரிக்கையின்போது, ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் விதமாக, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பேரவையில் திட்டத்தை அறிவித்துஒரு வாரம்தான் ஆகிறது. பேரவைகூட்டம்கூட இன்னும் முடியவில்லை.அதற்குள்ளாகவே இத்திட்டத்தைஅமைச்சர் சேகர்பாபு செயல்படுத்தியுள்ளார். அவர், எள் என்பதற்கு முன்பு எண்ணெய்யாக நிற்கக் கூடியவர். அவரால் இந்து சமய அறநிலையத் துறை கொடுத்துவைத்த துறையாக உள்ளது.

கோயில் நிலங்கள், சொத்துகள் மீட்கப்படுகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழில் வழிபாடுசெய்யும் அற்புதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இறைவனைப் போற்றும் போற்றிப் பாடல் புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம்நிதி தரப்பட்டுள்ளது. 15 வகை பொருட்கள் தரப்பட்டுள்ளன.

பேரவையில், மானியக் கோரிக்கை விவாதத்தில் பதில் அளித்து பேசிய அமைச்சர், 120 அறிவிப்புகளை வெளியிட்டார். இது ஒரு சாதனை. ஏராளமான கோயில்களில் திருப்பணிகள் நடக்க உள்ளன. புதிய தேர்கள் வலம் வரப் போகின்றன. இதுவரை இல்லாத வகையில், திருக்கோயில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. அர்ச்சகர்கள், கோயில்பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளன. இவை அனைத்தும் செய்துமுடிக்கப்பட்டால் அறநிலையத் துறையின் பொற்காலம் சில மாதங்களில் உருவாகிவிடும்.

அந்த வரிசையில் இன்று, ஒருகாலபூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959கோயில்களின் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைதொடங்கிவைத்துள்ளேன். இதன்மூலம்அரசுக்கு ஆண்டுக்கு ரூ.13 கோடி கூடுதல் செலவாகும். இதை செலவு என்றுகூறவில்லை. இதன்மூலம் 13 ஆயிரம்குடும்பங்கள் வாழ்வு பெறும். ஒருகாலபூஜை நடக்கும் கோயில்களுக்கான வைப்புநிதி ரூ.2 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இக்கோயில்களில் வழிபாடு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஏராளமான திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. பேரவை கூட்டத்தொடர் செப்.13-ம் தேதி நிறைவு பெற உள்ளது.அதன்பிறகு அறிவிப்புகள் எல்லாவற்றையும் படிப்படியாக நிறைவேற்ற திட்டங்களை வகுத்துள்ளோம். வெறும் அறிவிப்புடன் எந்த திட்டமும் நின்று விடாது. மாதம்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி அமைச்சர்கள், அதிகாரிகளை நானே கண்காணிக்கப் போகிறேன்.

ஒவ்வொரு திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அதை நிறைவேற்றும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவேன்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அசன் மவுலானா எம்எல்ஏ, சுற்றுலா துறை செயலர்சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x