Published : 09 Sep 2021 03:15 AM
Last Updated : 09 Sep 2021 03:15 AM

கரோனாவால் பல கட்டுப்பாடுகள் விதிப்பு - புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு : வேட்பாளருடன் ஐவர் மட்டுமே பிரச்சாரம் செய்யலாம் - கை குலுக்க தடை

விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது உறுதியாகியுள்ளது. தேர்த லுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கரோனாவால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்பாளருடன் ஐவர் மட்டுமே வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்யலாம். வென்ற வேட்பாளர் சான்றிதழ் பெறும்போது கைகுலுக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் இதுவரை இருமுறை மட்டுமே உள்ளாட்சித்தேர்தல் நடந்துள்ளது. கடந்த 2006-ம்ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, இடஒதுக்கீடு வாரியாக வார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்தலுக்காக தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் இருந்து 4 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பிரச்சாரத்துக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன் விவரம்:

புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கடந்த ஜூலை 8-ம் தேதி ஆலோசனை நடத்தி, அதன்படி மாநில தேர்தல் ஆணையம், வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறது.

சமூக இடைவெளி அவசியம்

தேர்தல் தொடர்பான ஒவ்வொரு செயல்பாட்டின் போது ஒவ்வொரு நபரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நபரையும் கட்டாயமாக வெப்பமானி மூலம்உடல்நிலை குறித்து பரிசோதனைவேண்டும். தேர்தல் சம்பந்தமான செயல்பாடுகளுக்கான அறைகள், அரங்குகள், வளாகங்களின் நுழைவு வாயிலில் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சிகளை முடிந்தவரை ஆன்லைன் மூலமே அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். முதல் வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல் செய்து திரும்பிய பிறகே அடுத்த வேட்பாளர் மனுத் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படும். ஒரு கரோனா தொற்றுடையவர் வேட்பாளராக விரும்பினால், அவர் முன்மொழிபவர் மூலம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்களின் முன்னிலையில் தொகுதி வாரியாக மனுக்கள் பரிசீலனை நடைபெறும். அப்போது வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் இருக்க வேண்டும்.

குலுக்கலில் சின்னம்

இறுதி வேட்பாளர் பட்டியல் தொகுதி வாரியாக தயாரிக்கப்பட்டு, அதற்கேற்ப சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சின்னங்கள் ஒதுக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர் ஒரே சின்னத்தை தேர்வு செய்திருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும்.

வேட்பாளர் அதிகபட்சமாக 5 பேருடன் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யலாம். பிரச்சாரத்தின் போது தவறாமல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பெரிய குழுக்களாக சென்று பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வேட்பாளர்கள் தொகுதியில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.

விரைவில் தேர்தல் தேதி

உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் அதிகளவில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியில் இருப்போர் சுகாதாரத்துறை மூலம் வெப்ப அளவு பரிசோதித்தே அனுமதிக்கப்படுவர். வெல்லும் வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் தரும் போது கைக்குலுக்க அனுமதி கிடையாது.

வென்றோர் ஊர்வலம் செல்லவும், ஆதரவாளர்கள் ஒன்று கூடவும் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதன் மூலம், புதுச்சேரியில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x