Published : 06 Sep 2021 03:15 AM
Last Updated : 06 Sep 2021 03:15 AM

சேலத்தில் கனமழையால் தாழ்வான பகுதியில் சூழ்ந்த தண்ணீர் : ஈரோட்டில் தொடர் மழையால் அவசர உதவிக்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு

சேலத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால், அழகாபுரம் கிரீன்வே சாலையில் குளம்போல தேங்கிய மழை நீர். அடுத்தபடம்: ஈரோடு ஆர்.கே.வி.சாலையில் மழை வெள்ளநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

சேலம் / ஈரோடு

சேலம், ஈரோட்டில் நேற்று பெய்தகனமழையால், தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சேலத்தில் ஒரே நாளில் 92 மிமீ மழை பதிவானது. அடுத்தடுத்த நாட்களில் பெய்த மழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது.

இந்நிலையில், நேற்று மதியத்துக்கு மேல் திடீரென பலத்த காற்றும் அதைத் தொடர்ந்து கனமழையும் பெய்தது.

ஏற்கெனவே தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில், நேற்று பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மேலும் தண்ணீர் சூழ்ந்தது.

குறிப்பாக சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்தில் பச்சப்பட்டி பிரதான சாலை, அண்ணா தெரு, காளிதாசர் தெரு, சேர்மன் ராமலிங்கம் தெரு சந்திப்பு, நாராயணநகர் மற்றும் அத்வைத ஆசிரமம் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகினர்.

மேலும், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்துமிடம், 2-வது நுழைவு வாயில் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். இதையடுத்து, பச்சப்பட்டி பகுதியில் 6 மீட்டர் அகலத்துக்கு சிறுபாலம் அமைக்கவும், 100 மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே, சேலத்தாம்பட்டி ஏரி உபரிநீர் வெளியேற வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, நிலம் சமன்படுத்தும் பணி நடைபெற்றது. இப்பணியை நேற்று முன்தினம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மாநகர பொறியாளர் அசோகன், உதவி ஆணையர்கள் சண்முக வடிவேல், ராம்மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஈரோட்டில் மழை

ஈரோட்டில் 2-வது நாளாக நேற்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர உதவிக்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் சாரல் மழையாகத் தொடங்கி, இரவில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு நகரில் நேற்று முன் தினம் மாலை பலத்த காற்று, இடியுடன் அரை மணி நேரம் கனமழை பெய்தது.

நேற்று காலை முதல் வெயில் இருந்த நிலையில், மதியம் மழை பெய்யத் தொடங்கியது. காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. ஆர்.கே.வி.சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி, பன்னீர் செல்வம் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாலையில் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். ஈரோடு சம்பத் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மரக்கிளைகள் உடைந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு அறை

மழைவெள்ள பாதிப்பு உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க அவசர கால உதவி எண்களான 1077 மற்றும் 0424 – 2260211 ஆகிய எண்கள் மற்றும் 9791788852, 8870812220 ஆகிய வாட்ஸ் அப் எண்களில் தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x