Published : 05 Sep 2021 03:14 AM
Last Updated : 05 Sep 2021 03:14 AM

ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த 6 மாதம் அவகாசம் கோரி - உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு : வார்டு மறுவரையறை செய்ய வேண்டி இருப்பதாக அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த 6 மாதங்கள் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 22 ஆயிரத்து 581 கிராம ஊராட்சி வார்டுகள், 1381 ஒன்றிய வார்டுகள், 140 மாவட்ட ஊராட்சி வார்டுகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

38 லட்சம் வாக்காளர்கள்

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, இந்த மாவட்டங்களில் 37 லட்சத்து 77 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்கள், 38 லட்சத்து 81 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்கள், 835 திருநங்கைகள் என மொத்தம் 76 லட்சத்து 59 ஆயிரத்து 720 வாக்காளர்கள் உள்ளனர். இந்த விவரங்களை மாநில தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது. இம்மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் உத்தர விடப்பட்டுள்ளது.

புதிய மாநகராட்சி, நகராட்சிகள் அறிவிப்பு

இதனிடையே தற்போது நடை பெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில், "நகராட்சிகளுடன் அருகில் உள்ள வளர்ச்சி அடைந்த நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து 6 மாநகராட்சிகள், 29 நகராட்சிகள் உருவாக்கப்படும்" என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார்.

பொதுமக்கள் எதிர்ப்பு

தாம்பரம் நகராட்சியுடன் 15 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகளை இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப் படும். அவ்வாறு தரம் உயர்த்தப் படும் அல்லது விரிவாக்கம் செய்யப் படும்போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில் ஏற்கெனவே தேர்ந் தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக் கப்படுகின்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களது பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளிலேயே தொடர்வார்கள். தொடர்புடைய உள் ளாட்சி அமைப்பின் பதவிக் காலம் முடிவடையும்போது, இணைக்கப்படும் பகுதிகள் புதிதாக உருவாக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுமைக்கு உட்படுத் தப்படும் என்றும் அமைச்சர் அறி வித்தள்ளார்.

இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி யில் இணையும் கிராம ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இப்போது தேர்தல் நடத்தினால், எங்கள் பகுதி மாநகராட்சியுடன் இணைய 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இப்போதே மாநகராட்சியுடன் இணைத்து, வார்டு மறுவரையறை செய்து, பின்னர் மாநக ராட்சி தேர்தல் நடத்தினால் எங்கள் பகுதிக்கு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்ட நிதி கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே எங்கள் ஊராட்சிகளுக்கு இப்போது தேர்தல் நடத்தக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி யாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங் கல்பட்டு நகராட்சி எல்லையும் விரிவாக்கப்பட உள்ளது. இதனால் இவ்விரு நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஏராளமான கிராம ஊராட்சிகள் இணைய உள்ளன. இப்பகுதி மக் களும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை இப்போது நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

6 மாதங்கள் அவகாசம்

இதனிடையே 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு முடிவடைய இருப்பதால், இத்தேர்தலை நடத்த மேலும் 6 மாதங்கள் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக, அடையாரில் நேற்று நடைபெற்ற மாநகராட்சியின் 24 மணி நேரம் இயங்கும் கரோனா தடுப்பூசி மையம் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தி யாளர்கள் கேட்டதற்கு, அவர் பதில் அளித்ததாவது:

வார்டு மறுவரையறை

புதிதாக 6 மாநகராட்சிகள், 29 நக ராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றுடன் நகராட்சிகள், பேரூராட்சி கள், ஊராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றால் அப்பகுதிகளில் புதிதாக வார்டு மறுவரையறை செய்ய வேண்டியுள் ளது. வார்டு மறுவரையறை தொடர் பாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு, அப்பணிகளை மேற்கொள்ள 100 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டியுள்ளது. 100 நாட்கள் முடிந்த பிறகு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டதன் வரைவு பட்டியலை வெளியிட வேண்டும். பின்னர் அந்த பட்டியலில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக பொதுமக்களிடம் ஆட்சேபங்களை பெற்று, அதை சரி செய்து, பின்னர் இறுதி மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் பட்டியலை வெளியிட 30 நாட்கள் தேவைப்படுகிறது. இந்த அரசைப் பொருத்தவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதில் உறுதியாக உள்ளது. தேர்தலை நடத்துவதற்காகத்தான் அரசு முயற்சி எடுத்து வருகிறது. தோராயமாக கணக்கிட்டால் கூட சுமார் 4 மாதங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. இதில் ஒருசில மாதங்கள் கூடலாம், குறையவும் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார.

கட்சிகளுடன் நாளை ஆலோசனை

இதற்கிடையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு நேரத்தை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உயர்த்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தொற்று அறிகுறி உள்ளவர் கள் வாக்களிக்க மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக் கப்படுவர் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்துவது தொடர்பாக அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை நாளை (6-ம் தேதி) பகல் 12 மணிக்கு கோயம் பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x