Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM

இஸ்கான் நிறுவனர் லபிரபுபாதாவின் 125-வது பிறந்த நாள் விழா : ரூ.125 சிறப்பு நாணயம் வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

இஸ்கான் எனப்படும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தை தோற்றுவித்த ஆச்சார்யர் ஏ.சி.பக்தி வேதாந்தா சுவாமி பிரபுபாதாவின் 125-ம் ஆண்டு பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

லபிரபுபாதா, நவீனகாலஇந்திய ஆன்மிக கலாச்சாரம், தத்துவம் மற்றும் பாரம்பரியத்துக்கான சிறந்த தூதர் ஆவார். இவர் இந்தியாவின் அமைதி மற்றும் நல்லெண்ண செய்தியை மேற்கத்திய நாடுகளில் அறிமுகம் செய்வதற்காக தனது 69-வது வயதில் கொல்கத்தாவில் இருந்து நியூயார்க் நகருக்கு சென்றார்.

அங்கு 12 ஆண்டுகள் இருந்த லபிரபுபாதா கிருஷ்ணர் கோயில்கள், பதிப்பகம், கல்வி நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பை நிறுவினார். அந்த காலகட்டத்தில் அவர் உலகம் முழுவதும் 14 முறை பயணம் செய்து‘வசுதெய்வ குடும்பகம்’ பற்றியும்,மனித சமுதாயத்தின் ஒற்றுமை யையும் போதித்தார்.

மேலும் பகவத் கீதை, மத் பாகவதம், சைதன்ய சரிதாம்ருதம் ஆகியவற்றின் அடிப்படையிலான 70-க்கும் மேற்பட்ட பக்தி இலக்கியங்களை எழுதினார். இதனால் அவர் தலைசிறந்த தத்துவ அறிஞர், ஆன்மிகத் தலைவர்,துறவி, சீர்திருத்தவாதி எனப் போற்றப்படுகிறார்.

அவர் வயது, நாடு, மதம், பாலினம், சாதி, வர்க்க பேதம் பார்க்காமல் அனைவரையும் மேம்படுத்தும் பணியில் ஓய்வின்றி ஈடுபட்டார். இவரது போதனைகளால் லட்சக்கணக்காண மக்கள் ஈர்க்கப்பட்டனர்.

லபிரபுபாதாவின் போதனைகளை அனைத்து தரப்பு மக்களையும் அறியச் செய்வது அவசியமாகும். சமகால சமுதாய மக்கள்அவரது போதனைகளால் வழிநடத்தப்பட வேண்டும் என விரும்புகிறோம். அவருக்கு நெருக்கமாக மக்களைக் கொண்டுவருவது, அவரது புனித நினைவுக்கான எங்களது பணிவான அஞ்சலியாகஇருக்கும். இவ்வாறு இஸ்கான்அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் புகழாரம்

இஸ்கான் நிறுவனர் லபிரபுபாதாவின் 125-வது பிறந்த நாள் விழாவை இணையவழியில் நேற்று தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, அவரது உருவம் பொறித்த 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் இஸ்கான் அமைப்பு துறவிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்பிய லபிரபுபாதா, கிருஷ்ணர் பிறந்த நாளிலேயே பிறந்திருப்பது ஆச்சரியமான நிகழ்வு.

கிருஷ்ண பக்தியின் மூலம் உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர்களை மனநிறைவு கொள்ளச் செய்தவர் லபிரபுபாதா. கிருஷ்ணர் மீது மட்டுமல்ல, பாரதநாட்டின் மீதும் பக்தி கொண்டவர் பிரபுபாதா. சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, ஆங்கில அரசு நடத்திய கல்லூரி யில் சேர மறுத்துள்ளார்.

அந்நியர்கள் ஆண்டபோது பக்திதான் இந்தியாவின் ஆன்மாவை உயிர்ப்புடன் வைத்திருந்தது. லபிரபுபாதா போன்ற மகான்கள், பக்தி உணர்வுடன் சமுதாயத்தை இணைத்து மக்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.

சுவாமி விவேகானந்தர் வேதத்தின் கருத்துகளை மேற்கு நாடுகளுக்கு கொண்டுசென்றார். அதேபோல, லபிரபுபாதா பக்தி,யோகாவை உலகம் முழுவதும்எடுத்துச் சென்றார். பல்வேறுநாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான இஸ்கான் கோயில்கள், இந்திய கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளன.

மனிதநேயத்தைப் பரப்பி வரும் இஸ்கான் அமைப்பு, பேரிடர் உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டத்தில், மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. தொற்றுநோய் பரவலைத் தடுப்பதிலும் இஸ்கான் பெரும் பங்காற்றி வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x