Published : 28 Aug 2021 03:12 AM
Last Updated : 28 Aug 2021 03:12 AM

ரூ.317 கோடியில் வீட்டு வசதி, கல்வி, வேலைவாய்ப்பு திட்டம் - இலங்கை தமிழர் குடியுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் தலைமையில் குழு : சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை, அவர்கள் நாடு திரும்ப ஏற்பாடுகள் போன்றவற்றுக்கு தீர்வு காண தமிழகஅரசின் சிறுபான்மையினர், வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அவர்களுக்கான வீட்டுவசதி, கல்வி, வேலைவாய்ப்பு திட்டங்களுக்காக ரூ.317.40 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:

இலங்கை தமிழர்கள் கடந்த 1983-ல் ஏற்பட்ட இனக் கலவரத்துக்கு பிறகு, கடல் கடந்து தமிழகம் வரத் தொடங்கினர். 1983 முதல் இதுவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இவர்களில் 18,944 குடும்பங்களை சார்ந்த 58,822 பேர் 29 மாவட்டங்களில் உள்ள 108 முகாம்களில் தங்கியுள்ளனர். 13,540 குடும்பங்களை சார்ந்த 34,087 பேர் காவல் நிலையங்களில் பதிவு செய்து, வெளிப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக முறையானஅடிப்படை வசதிகள் இன்றி வாழும்இலங்கை தமிழர்களுக்கு இனி, பாதுகாப்பான, கவுரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை இந்த அரசு உறுதி செய்யும். இதற்காக, முகாம்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் ரூ.231.54 கோடியில் புதிதாக கட்டப்படும். முதல்கட்டமாக 3,510 புதிய வீடுகள் கட்ட இந்த நிதியாண்டில் ரூ.108.81 கோடி ஒதுக்கப்படும்.

முகாம்களில் மின்வசதி, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மேம்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கப்படும். ஆண்டுதோறும் இந்த வசதிகளை செய்துதர, இலங்கை தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.

பொறியியல் பயில தேர்வான மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கும், வேளாண்மை, வேளாண் பொறியியல் பட்டப் படிப்பில் முதல் 5 மாணவர்களுக்கும், முதுநிலை பட்டப் படிப்பு பயிலும் அனைத்து முகாம் வாழ் மாணவர்களுக்கும் கல்வி, விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். இதற்காக ஆண்டுக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.

முகாமில் இருப்பவர்களில் ஆண்டுக்கு சுமார் 750 மாணவர்கள் கலை, அறிவியல் பட்டப் படிப்புகள், பட்டயம் உள்ளிட்ட தொழிற்படிப்புகள் பயில்கின்றனர். அவர்களுக்கான கல்வி உதவித் தொகை பாலிடெக்னிக்குக்கு ரூ.2,500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், இளநிலை கலை, அறிவியல் படிப்புக்கு ரூ.3,000-ல் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு ரூ.5,000-ல் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.1.25 கோடி ஒதுக்கப்படும்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி

முகாமில் இருக்கும் இளைஞர்கள் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும். முகாமில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சிறு குறு தொழில்கள் செய்ய ஏதுவாகவும் சுழல்நிதி, சமுதாய முதலீட்டு நிதியாக, 300 சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் வழங்கப்படும். கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 321 குழுக்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.50 ஆயிரத்துடன் கூடுதலாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். இதற்காக ரூ.6.16 கோடி ஒதுக்கப்படும்.

முகாமில் இருப்பவர்களுக்கான மாதாந்திர பணக்கொடை, குடும்பத் தலைவருக்கு ரூ.1,500, இதர பெரியவர்களுக்கு ரூ.1000மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500 ஆக உயர்த்தப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.21.49 கோடி செலவாகும்.

முகாமில் இருப்பவர்களுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு மிக குறைவாக உள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் அவர்கள் எரிவாயு இணைப்பு பெற இயலவில்லை. எனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாக எரிவாயு இணைப்பு, அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ரூ.7 கோடி செலவாகும். இதுதவிர, குடும்பத்துக்கு 5 சிலிண்டர்களுக்கு தலா ரூ.400 மானியம் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.3.80 கோடி ஒதுக்கப்படும்.

முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு தற்போது 20 கிலோவுக்கு மேல் வழங்கப்படும் அரிசிக்கு, கிலோவுக்கு 57 பைசா மானியம் வழங்கப்படுகிறது. இதை ரத்து செய்து, அவர்கள் பெறும் முழு அரிசியும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான ரூ.19 லட்சம் செலவை அரசே ஏற்கும்.

மத்திய அரசு நிர்ணயித்த விலையில் அவர்களுக்கு ஆடை, போர்வைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டு பெறப்பட்ட விலைப்புள்ளிகள் அடிப்படையில், ஒரு குடும்பத்துக்கான நிதி ரூ.1,790-ல் இருந்து ரூ.3,473 ஆக உயர்த்தப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.3 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.250 மதிப்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 8 வகையான சமையல் பாத்திரங்களை இலவசமாக வழங்க இயலாத நிலையில், உயர்த்தப்பட்ட வீதத்தில் ரூ.1,296 மதிப்பில் சேலம் இந்திய உருக்காலை நிறுவனம் மூலம் பாத்திரங்கள் வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.1.97 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

இதுதவிர, அகதிகளுக்கு உரிய உதவிகள், அடிப்படை வசதிகள், குடியுரிமை வழங்குதல், இலங்கை திரும்ப தகுந்த ஏற்பாடுகள் போன்றவற்றுக்கு தீர்வு காண, தமிழக அரசின் சிறுபான்மையினர், வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர், ஒரு எம்.பி., ஒரு எம்எல்ஏ, பொதுத் துறைசெயலர், மறுவாழ்வுத் துறை இயக்குநர், பிற உயர் அதிகாரிகள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம் வாழ் மற்றும் வெளியில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு விரைவில் அமைக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள முகாம்வாழ் இலங்கை தமிழர் நலன் பேண, மொத்தம்ரூ.317.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

பாஜக உறுப்பினர் யோசனை

முதல்வரின் இந்த அறிவிப்புகளை சட்டப்பேரவையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுப் பேசினர். பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘பிரதமர் தற்போது ‘உஜ்வாலா-2’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், ஆதார்அட்டை இல்லாவிட்டாலும் சுய உத்தரவாத கடிதம் அளித்தால் எரிவாயு இணைப்பு பெற முடியும். இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தால், தமிழக அரசு அதற்காக ஒதுக்கும் நிதி மிச்சப்படும். இதை அரசு முன்னெடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x