Published : 19 Aug 2021 03:11 AM
Last Updated : 19 Aug 2021 03:11 AM

கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் : வானதி சீனிவாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த விவாதம்:

வானதி சீனிவாசன் (பாஜக): கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு கவலை கொள்ளச் செய்கிறது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசிடம் கலந்தோலோசித்துதான் செய்ய வேண்டும். அதன்பின் பங்கீடு குறித்து பேச முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம்.

வானதி சீனிவாசன்: மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தும் எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று தெளிவாக கூறிவிட்டு, மெட்ரோ திட்டத்தில் மட்டும் இந்த வார்த்தையை பயன்படுத்தியதில் சந்தேகம் உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: மெட்ரோ திட்டத்தை பொறுத்தவரைமத்திய அரசின் நிதியுதவி பெற்றுதான் நிறைவேற்ற முடியும். அப்படித்தான் இதுவரை நடக்கிறது. நேற்றுகூட (ஆக.17) மத்திய அரசிடம் இருந்து இரண்டாம் கட்டத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக செய்தி வந்துள்ளது. நான் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தபோது இதுகுறித்து விளக்கமாக கூறியுள்ளேன். அழுத்தம் கொடுத்து பேசினேன். அதன் அடிப்படையில்தான் அனுமதி கிடைத்துள்ளது. கோவைக்கும் நிச்சயமாக அழுத்தம் கொடுப்போம். கவலைப்பட வேண்டாம். மதுரைக்கும் மெட்ரோ ரயில் அறிவித்துள்ளோம். திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

வானதி சீனிவாசன்: கோவை மத்திய சிறைக்கு அருகில் அதிகஅளவு நிலம் உள்ளது. எனவே, மத்திய சிறையை புறநகர்ப் பகுதிக்கு மாற்றி விட்டு, அங்குள்ள நிலப்பகுதியில் பூங்கா அமைத்தால் கோவை மக்கள் நல்ல காற்றை சுவாசிக்க முடியும்.

முதல்வர் ஸ்டாலின்: கோவையில் உள்ள மத்திய சிறையை மாற்றி, அங்கு ஒரு பூங்காவை உருவாக்க வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்தியபோதே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், அதற்குப்பின் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, 10 ஆண்டுகளாக அவர்கள் அதைப் பற்றி யோசிக்கவில்லை. எனவே, உங்கள் கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x