Published : 19 Aug 2021 03:11 AM
Last Updated : 19 Aug 2021 03:11 AM

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக - இந்த கூட்டத்தொடரிலேயே சட்ட முன்வடிவு : உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான சட்ட முன்வடிவு, நடப்பு கூட்டத் தொடரிலேயே கொண்டுவரப்படும் என்று உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவர் தனது கன்னிப்பேச்சில் கூறியதாவது:

அரசியலை அருகில் இருந்து கவனித்து பேரவையின் நடைமுறைகளை ஓரளவுக்கு அறிந்து வைத்திருந்தாலும், இதுவரை பார்வையாளனாக மட்டுமே அவையைகவனித்து வந்த நான், முதல்முறையாக பங்கேற்பாளனாக வாய்ப்பு பெற்றுள்ளேன்.

பேரவை உறுப்பினராக இன்னும் நெருங்கி வந்து பார்க்கும்போதுதான் இதன்ஜனநாயகத் தன்மையும், நடைமுறையும் என்னை பொறுப்பு மிக்கவனாகவும் எளிமையானவனாகவும் உணரச் செய்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திமுக தலைவர் நினைத்திருந்தால் என்றோ ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால், ஜனநாயக வழியில் மக்களை சந்தித்துதான் ஆட்சியமைக்க வேண்டும் என்று பொறுமை காத்தார்.

நீடித்த நிலையான வளர்ச்சி

பால் விலை, பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை 100 நாட்களுக்குள் இந்த அரசு செயல்படுத்தி, மாநிலத்தின் நீடித்த நிலையான வளர்ச்சிக்குஅடித்தளமிட்டுள்ளது. நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்ல உள்ளது. வேளாண்பட்ஜெட்டில் உள்ள ஒவ்வொரு அறிவிப்பும் திட்டமும் விவசாயிகளுக்கு நம்பிக்கை தருவதாகவிவசாயிகளும், விவசாய இயக்கத்தினரும் பாராட்டியுள்ளனர்.

தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக இருப்பது நீட்தேர்வாகும். அனிதாவில் தொடங்கி 14மாணவ, மாணவியர் நீட்தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்று ஆரம்பம் முதலே முதல்வர் வலியுறுத்தினார். ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமும் நீட் வேண்டாம் என்பதுதான். நீட் தேர்வு தமிழகத்தின் அனைத்து தரப்பையும் பாதிக்கிறது. இதில் கட்சி பேதம் கிடையாது. எனவே, நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நீட் தேர்வு ரத்து என்பதை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சூட்ட வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குளை வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை.

அவர்கள் நல்லது செய்தால் ஏற்கவும், பாராட்டவும் தயாராகஉள்ளோம். ஆனால், தவறிழைக்கும் பட்சத்தில் முன்பைவிட இன்னும் வேகமாக சுட்டிக் காட்டுவோம். முதல்வர் எங்களை கண்ணியமாகத்தான் நடந்து கொள்ள சொல்லியிருக்கிறார். அடிமையாகஇருக்கச் சொல்லவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தனது கன்னிப்பேச்சில் நீட் பிரச்சினை குறித்து உறுப்பினர் உதயநிதி அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் கட்சிப் பாகுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான், திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது குறித்து நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளித்துள்ளோம்.

அதனால்தான் ஆட்சிக்கு வந்ததும், இதுபற்றி பொதுமக்கள் கருத்துகளை கேட்டு ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டு, அவரும் அறிக்கைஅளித்துள்ளார். தற்போது அந்தஅறிக்கை சட்டரீதியாக பரிசீலிக்கப்பட்டு, இந்த கூட்டத் தொடரிலேயே அதற்குரிய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும்.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x