Last Updated : 14 Aug, 2021 03:18 AM

 

Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 03:18 AM

ஆங்கிலேய அரசுக்கு எதிரான பிரசுரங்களை சுமந்து சென்ற ஏபிடி பேருந்துகள் :

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிரான போராட்ட அறிக்கைகளை ரகசியமாக கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஏபிடி நிறுவனத்தின் பேருந்துகள்.

நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், 1920-ல் கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயர்கள் பேருந்து போக்குவரத்தினை அறிமுகம் செய்தனர். கோவையில் ஜி.டி.நாயுடு. முதல் பேருந்து போக்குவரத்தை தொடங்கினார். அதன் பின்னர் திருப்பூரில் எல்.ஆர்.கோவிந்தசாமி நாயுடு, வீராசாமி செட்டியார், பொள்ளாச்சியில் நாச்சிமுத்து கவுண்டர் ஆகியோர் பேருந்து போக்குவரத்தை நடத்தி வந்தனர்.

காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியல் ஆர்வம் கொண்டார் நாச்சிமுத்து கவுண்டர். இந்தியாவில் 1932-ம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கியது. பொள்ளாச்சியைச் சுற்றி உள்ள கிராமங்களில் தேசிய விடுதலை இயக்கத்தின் மீதான பற்றால் தேச பக்தர்களிடையே விடுதலை உணர்வு பொங்கிய காலம் அது. நாச்சிமுத்து கவுண்டர் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூரில் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்றுச் சென்ற திருப்பூர் குமரன் காவலர்களால் தாக்கப்பட்டு உயிர் துறந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து ஆங்கிலேய அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. பொள்ளாச்சியில் பி.ஆர்.கந்தசாமி கவுண்டர் தலைமையில் 144 சட்ட மீறல் இயக்கம் தொடங்கியது. அரசுக்கு எதிரான இந்த இயக்கத்தின் ஆவேசமான போராட்டங்கள் ஆங்கிலேய அரசை அசர வைத்தன. அதன் பின்னர் விடுதலை போராட்ட வீரர்கள் ஆங்கிலேய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

மாகாணக் கமிட்டி, மாவட்ட கமிட்டிகளின் சுற்றறிக்கைகள், போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் பேச்சுக்கள், போராட்டம் குறித்த அறிக்கைகள் அடங்கிய தகவல்களை ஆங்கிலேய அதிகாரிகளின் கண்காணிப்பினை மீறி பொள்ளாச்சி பகுதியில் விடுதலை போராட்ட வீரர்களிடம் கொண்டு சேர்ப்பது, இயக்க நிர்வாகிகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. இதனால் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒருங்கிணைவதும், போராட்டம் குறித்து திட்டமிடுவதும் ஆங்கிலேய அதிகாரிகளால் தடுக்கப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் ராஜ துரோகமாக அறிவிக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிரான போராட்ட அறிக்கைகளை பொள்ளாச்சி பகுதியில் உள்ள விடுதலை போராட்ட வீரர்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பினை நாச்சிமுத்து கவுண்டர் தைரியமாக ஏற்றுக்கொண்டார்.

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விடுதலை போராட்ட வீரர்களிடம் அரசாங்கத்துக்கு எதிரான போராட்ட அறிக்கைகள் அடங்கிய பிரசுரங்களை தனது ஏபிடி நிறுவன பேருந்துகளில் ரகசியமாக கொண்டு சென்றார். 2–ம் உலகப்போர் தீவிரமடைந்த நேரம் உதகமண்டலத்தில் உள்ள அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து வெடிமருந்துகளை சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு செல்லும் தகவலை அறிந்த விடுதலை போராட்ட வீரர்கள் போத்தனூருக்கும், சிங்கநல்லூருக்கும் இடையே தண்டவாளத்தில் இருந்த பிஷ் பிளேட்டுகளை அகற்றி ரயிலை கவிழ்த்தனர். 1942 ஆகஸ்ட் 26-ம் தேதி சூலூர் விமான நிலையம் தேசபக்தர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்விரு சம்பவத்திலும் ஈடுபட்ட கே.வி.ராமசாமி மற்றும் கே.பி. திருவேங்கடம் இருவரும் ஆங்கிலேய போலீஸாரால் தேடப்பட்டு வந்தனர். இருவரையும் நாச்சிமுத்து கவுண்டர் பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு கிராமங்களில் ஆங்கிலேய போலீஸாரின் கண்ணில் படாமல் தலைமறைவாக தங்கவைத்து காப்பாற்றி வந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x