Published : 05 Aug 2021 03:15 AM
Last Updated : 05 Aug 2021 03:15 AM

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை : தடை செய்ய விரைவில் புதிய சட்டம் : அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தற்போதைய முதல்வர் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்த கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து அவசரகதியில் சட்டம் ஒன்றை அதிமுக அரசு நிறைவேற்றியது.

தடை சட்டம் ரத்து

இந்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டு உரிய கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து வைத்தார். இருந்தபோதிலும், இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமானகாரணங்களை சட்டம் நிறைவேற்றும்போது கூறவில்லை. விளையாட்டை முறைப்படுத்தும் உரியவிதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்றுகூறி, தமிழக அரசின் தடை சட்டத்தை ரத்து செய்து சென்னைஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டுவர தடையில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி யுள்ளது.

இந்த தீர்ப்பு வெளிவந்த உடனேயே, பொதுநலன் மிக முக்கியம் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் தகுந்த காரணங்களை தெளிவாக குறிப்பிட்டு, எவ்வித தாமதமும்இன்றி ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆகவே, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்யும் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்.

இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.

சட்டப்படிப்பு விண்ணப்பம் தொடக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப விநியோகத்தை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 14 அரசுசட்டக் கல்லூரிகள், ஒரு சீர்மிகுசட்டக் கல்லூரி, ஒரு தனியார் சட்டக்கல்லூரி என 16 சட்டக் கல்லூரிகளில் 2,275 இடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்புவது தொடங்கப்பட்டுள்ளது. ஆக.26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும். அனைத்து மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படும்.

7 பேர் விடுதலை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை பொறுத்தவரை, ஆளுநர் தெளிவான முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டார். குடியரசுத் தலைவர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முடிவு எடுக்கப்படாத நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x