Published : 05 Aug 2021 03:18 AM
Last Updated : 05 Aug 2021 03:18 AM

வேளாண் உட்கட்டமைப்பு நிதி பெற விண்ணப்பம் வரவேற்பு : சேலம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் திறனை ஏற்படுத்த வழங்கப்படும் வட்டிச் சலுகையுடன் கூடிய வேளாண் உட்கட்டமைப்பு நிதியைப் பெற விவசாயிகள், வேளாண் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வேளாண் தொடக்க நிதி நிறுவனங்கள் ஆகியோருக்குத் தேவையான கட்டுமான வசதிகளை ஏற்படுத்த வேளாண் உட்கட்டமைப்பு நிதி மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படுவதுடன், அதற்கு வட்டியில் 3 சதவீதம் சலுகையும் வழங்கப்படுகிறது.

உதாரணமாக, இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடனுதவி பெறுவாராயின், அக்கடனுக்கு விதிக்கப்படும் மொத்த வட்டி விகிதம் 4 சதவீதமாகும். இத்திட்டத்தின் கீழ் வட்டியில் 3 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது.

எனவே, நிகர வட்டி விகிதம் ஒரு சதவீதமாகும். எனவே, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வேளாண் தொடக்க நிதி நிறுவனங்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி பயன் பெற வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் கீழ்காணும் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைத் திட்ட வரையறைக்குள், ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும். இதற்கான மாதிரி விரிவான திட்ட அறிக்கை agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.

மின்னணு சந்தைப்படுத்தும் தளங்கள் உள்ளிட்ட தொடர் சங்கிலி சேவைகளை வழங்குதல், சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு குதிர், சிப்பம் கட்டும் அறைகள், மதிப்பீட்டு அலகுகள், தரம் பிரிக்கும் அலகுகள், குளிர்பதன சங்கிலிகள், தளவாட வசதிகள், முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்கள், பழுக்க வைக்கும் கூடங்கள், முந்திரி முதன்மைப் பதப்படுத்தும் நிலையம் போன்ற முதன்மை பதப்படுத்துதல் வரையிலான வசதிகளுக்கு கடனுதவி பெறலாம்.

மேலும், இந்த இணையதளத்தில் பயனாளியாகவும் பதிவு செய்து கொண்டு விரிவான திட்ட அறிக்கையினை இணையதளத்தின் மூலமாகவும் பதிவேற்றலாம்.

இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெற விரிவான திட்ட அறிக்கையுடன் விண்ணப்பக் கடிதம்/வங்கியின் கடன் விண்ணப்ப படிவம், விண்ணப்பதாரரின் புகைப்படம், அடையாள ஆதாரம் - (வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை), முகவரிக்கான ஆதாரம் (ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை), விண்ணப்பிப்பது பதிவு செய்யப்பட்ட நிறுவனம் எனில் பதிவு செய்ததற்கான ஆதாரம், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்த விவரம், வரவு-செலவு திட்ட அறிக்கை, நில உரிமைக்கான ஆவணங்கள், கடந்த ஒரு ஆண்டுக்கான வங்கிக் கணக்கு பரிவர்த்தனை நகல், திட்ட கட்டுமானத்திற்கான தளவமைப்பு, மதிப்பீடு மற்றும் அரசின் ஒப்புதல் ஆகியவை தேவை.

மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சேலம் அலுவலக தொலைபேசி: 0427-2417520-எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x