Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

நாடாளுமன்றத்தை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள் : பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொள்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பெகாசஸ் ஒட்டு கேட்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜக எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடிபேசிய விஷயங்களை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் விளக்கினார்.

கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது: மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நாடாளுமன்ற பாஜக எம்.பி.க்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். அதே நேரம் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொள்கின்றனர். திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், எம்.பி.க்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் காகிதங்களை கிழித்து எறிவதும் அதற்கு மன்னிப்பு கேட்காத எம்.பி.க்களின் செயல்பாடும் ஆணவம் மிக்கது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் பேசியது தொடர்பாக மத்திய அமைச்சர் வி. முரளீதரன் கூறியதாவது: நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்து தெரிவிப்பது அழகல்ல. இது நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பது போன்றது ஆகும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜூலை மாதம் இந்தியாவுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியை கொண்டு வந்துள்ளது. இந்த மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெண்கலம் வென்றதும், ஹாக்கி அணி சாதனைபடைத்ததும் ஜூலை மாதம்தான் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட மாட்டோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். இவ்வாறு வி.முரளீதரன் கூறினார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x