Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா - ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா : வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிஅரை இறுதியில் இந்திய அணி 2-5என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது. அதேவேளையில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, ஜெர்மனி அணியுடன் நாளை மோதுகிறது.

ஜப்பானின் டோக்கியோ நகரில்நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக்திருவிழாவில் நேற்று ஆடவர் ஹாக்கியில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெல்ஜியத்துடன் மோதியது. இதில் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. பெல்ஜியம் அணி சார்பில் அலெக்சாண்டர் ஹெண்ட்ரிக்ஸ் ஹாட்ரிக் கோல் அடித்துஅசத்தினார். அவர் 19, 49, 53-வது நிமிடங்களில் கோல் அடித்திருந்தார்.

அதேவேளையில் லோய்க் லூய்பேர்ட் (2- வது நிமிடம்), ஜான்-ஜான் டோஹ்மென் (60- வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்மான்பிரீத் சிங் 7-வது நிமிடத்திலும், மன்தீப் சிங் 8-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பெல்ஜியம் அணிக்கு 14 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. இதில் மூன்றை அந்த அணி கோலாக மாற்றியது.

அதேவேளையில் இந்திய அணி 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை மட்டுமே பெற முடிந்தது. இதில் ஒரு கோல் மட்டுமே இந்திய அணி அடித்தது. ஆட்டம் முழுவதுமே இந்தியஅணியின் டிபன்டர்களுக்கு பெல்ஜியம் ஓய்வில்லாத அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தது. பெல்ஜியம் அணியின் நோக்கம் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் வட்டத்துக்குள் நுழைந்து பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பெறுவதாகவே இருந்தது. இந்த பணியை அலெக்சாண்டர் ஹெண்ட்ரிக்ஸ், லூய்பேர்ட் திட்டமிட்டபடி சிறப்பாக செய்தனர்.

இதனால் 41 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வெல்வதற்கான இறுதிப்போட்டியில் நுழையும் இந்திய அணியின் கனவு கலைந்தது. எனினும் வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. மற்றொரு அரை இறுதியில் தோல்வியடைந்த ஜெர்மனி அணியுடன் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி நாளை மோதுகிறது. ஜெர்மனி தனது அரை இறுதி ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.

பிரதமர் மோடி...

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி தோல்வியைத் தழுவிய நிலையில், வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “வெற்றிகளும், தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம். டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது ஆடவர் ஹாக்கி அணியினர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், அதுதான் முக்கியம்.வரவிருக்கும் அடுத்த போட்டிக்கும், அணியினரின் எதிர்கால முயற்சிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நம் வீரர்களால் இந்தியா பெருமை அடைகிறது” என தெரிவித்துள்ளார்.

குண்டு எறிதல்

ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர் பால் சிங் தகுதி சுற்றில் 13-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறத் தவறினார். இதேபோன்று மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அனு ராணி இறுதி சுற்றுக்கு முன்னேறத் தவறினார்.

மல்யுத்தம்

மகளிருக்கான மல்யுத்தத்தில் 62 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சோனம் மாலிக் மங்கோலியாவைச் சேர்ந்த போலோர்டுயா குரேல்குவிடம் தோல்வியடைந்தார். போட்டி முடிவதற்கு அரை நிமிடம் இருக்கும் வரை 2-0 என முன்னிலையில் இருந்தார் சோனம் மாலிக். எனினும் கடைசியில் இரு புள்ளிகளை எடுத்தார் போலோர்டுயா. போட்டி 2-2 என சமனில் முடிந்தாலும் ஒரே சமயத்தில் இரு புள்ளிகளையும் பெற்றதால் போலோர்டுயா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x