Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

காவிரி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு

காவிரி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நேர்மையாக எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் வணக்கம் தெரிவித்துச் செல்வதற்காக கோவை வந்துள்ளோம். கரோனா தொற்று காரணமாக முன்னதாகவே வர இயலவில்லை. மக்களை சந்திக்கும் வகையில் அதிகளவில் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வந்தோம். ஆனால் மக்களின் நலன் கருதி அவற்றை ரத்து செய்து விட்டோம். கரோனா தொற்றில் தன்னார்வ பணியில் ஈடுபட்ட எங்களது கட்சி தொண்டர்கள் பலரை நாங்கள் இழந்துள்ளோம். அந்த குடும்பங்களை சந்தித்துப் பேசி விட்டு வந்துள்ளோம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்களது கட்சியில் பெண்களை முன்னிறுத்த முக்கிய காரணம், எனக்கு தமிழில் இருந்து தாய்ப்பால் வரை அளித்தது பெண் தான். அந்த நன்றி அனைவருக்கும் இருக்க வேண்டியது கடமை. அந்த கடமை மக்கள் நீதி மய்யத்துக்கு உள்ளது.

கோவைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிப்பதற்கு காரணம், காசு கொடுக்க மாட்டோம் என்று சொல்லியும் வெற்றிக்கு அருகில் கொண்டு போய் சேர்த்தவர்கள் கோவை மக்கள். இங்கு கொங்கு நாடு என்பது ஓர் அரசியல் கோஷம் ஆகும். அதை மக்களின் தேவையாக நான் பார்க்கவில்லை. மக்களே அதற்கு சரியான பதில் சொல்வார்கள். மேலும் இது ஒரு அரசியல் கட்சியின் யோசனை இல்லை. ஒரு பெருநிறுவனத்தின் யோசனை. ஆங்கிலேயர் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி இருந்தது போல தற்போது வடஇந்திய கம்பெனி ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர், அவ்வளவுதான். இந்த சுரண்டலுக்கு எந்த மாநிலமும் இடம் கொடுக்காது என்பது எனது நம்பிக்கை.

வரும் மக்களவை தேர்தலில், மத்தியில் பாஜகவுக்கு எதிரான அணியை திரட்டும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். அவரிடமிருந்து அழைப்பு வந்தால் இணைந்து செயல்படுவோம்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதாக தொடர்ந்து கூறி வருகிறது. என்னை பொறுத்தவரை பாஜக இதில் இரட்டை வேடம் தான் போடுகிறது. இரு மாநில நிர்வாகிகள் மத்திய அரசின் பொம்மைகள் தான். இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் மாநில துணைத் தலைவர் தங்கவேல், செயலாளர் அனுஷா ரவி, விவசாய அணி செயலாளர் மயில்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x