Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM

ராமநாதபுரம் உட்பட 4 மாவட்டங்களில் விரைவில் கடற்பாசி வளர்ப்பு : மத்திய, மாநில அரசுகள் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை பவளப் பாறைகள், கடற்பாசி உள்ளிட்ட கடல் தாவரங்கள் வளர்கின்றன. இதில் கடற்பாசி உணவு பொருட்கள், பல்வேறு ரசாயனப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

இயற்கையாக விளையும் இந்த கடற்பாசி சேகரிப்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவ மகளிர் ஈடுபட்டுள்ளனர். மேலும் மண்டபம், பாம்பன், ராமேசுவரம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் கடலில் செயற்கையாகவும் கடற்பாசி மீனவப் பெண்களால் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு மீன்வளத் துறை 60 சதவீதம் வரை மானிய உதவி வழங்கி வருகிறது.

இந்நிலையில் செயற்கையாக விளைவிக்கும் ‘ஹப்பா பைக் கஸ்’ எனப்படும் கடற்பாசி வளர்ப்பை அதிகரித்து, மீனவப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் ரூ.200 கோடியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் மாவட்ட கடல் பகுதிகளில் மீனவப் பெண்கள் மூலம் கடற்பாசி வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிதியுதவியுடன், தமிழக மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x